சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு மறு சீராய்வுமனு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு நன்றி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் அமைப்பின் மாநில உயர் மட்டக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும், டிட்டோஜாக மாநில உயர் மட்டக் குழுவின் சுழல் முறைத் தலைவர் இரா.தாஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் டிட்டோஜாக இணைப்புச் சங்கங்களின் 12 பொதுச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதி மன்றத் தீர்ப்பின் காரணமாக இந்தியா முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தற்போது ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தில் ஒன்றிய அரசே மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றுகோரியும்,
நாடாளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் பிரிவு 23ல் திருத்தம் செய்து பணியில் இருக்கும் ஆசிரியர்களை பாதுகாக்கவும் வலியுறுத்தி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு அக்டோபர் 8ம் தேதி மாலையில் டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான உச்சநீதி மன்றத் தீர்ப்பால் பதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை கருத்தில் கொண்டு 2009ன் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 23ல் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசுக்கு தமிழக எம்பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த எம்பிக்களிடம் கோரிக்கை மனு கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் டிட்டோஜாக் சார்பில் உச்சநீதி மன்ற தீர்ப்பின் மீது மறு சீராய்வு மனு தாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர்களையும் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் முதல்வருக்கும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் டிட்டோஜாக் சார்பில் நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்களின்படி அக்டோபர் 8ம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க இருக்கின்றனர் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் இரா.தாஸ் தெரிவித்தார்.