சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் நேற்று நடந்த தாள் 2க்கான தேர்வில் 3.31 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். 41 ஆயிரத்து 515 பேர் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு 2025 நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 11ம் தேதி தொடங்கி நவம்பர் 8ம் தேதி வரை நடந்தது. மேற்கண்ட தகுதித் தேர்வுகளை பொருத்தவரையில் தாள் 1க்கான தேர்வு 15ம் தேதி என இரண்டு நாட்கள் நடந்தது. தாள் 1ல் பங்கேற்க 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 367 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
மேலும், தாள் 2க்கான தேர்வு 16ம் தேதியும் நடந்தது.
இந்த தேர்வில் பங்கேற்க 3 லட்சத்து 73 ஆ யிரத்து 438 பட்டதாரிகள் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்காக தமிழகத்தில் 1241 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், இரண்டு தேர்வுகளையும் கண்காணிக்க 32 அதிகாரிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நியமித்தது. தாள் 1 தேர்வில் சென்னையில் மட்டும் 6056 பேரும், இவர்களுக்காக 23 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
தாள்2க்கான தேர்வில் சென்னையில் மட்டும் 22 ஆயிரத்து 932 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, நேற்று நடந்த தாள் 2க்கான தேர்வில் பங்கேற்க 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், நேற்றைய தேர்வில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 923 பேர்(88.9சதவீதம்) மட்டுமே பங்கேற்றனர். 41 ஆயிரத்து 515 பேர் பங்கேற்கவில்லை.


