சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு 15 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வுகளில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு 2025 நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 11ம் தேதி தொடங்கி நவம்பர் 8ம் தேதி வரை நடந்தது. தகுதித் தேர்வுகளை பொருத்தவரையில் தாள் 1க்கான தேர்வு 15ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க இதுவரையில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக 367 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தாள் 2க்கான தேர்வு 16ம் தேதியும் நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பட்டதாரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக தமிழகத்தில் 1241 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு தேர்வுகளையும் கண்காணிக்க 32 அதிகாரிகளை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் போது உருவாக்கிய விண்ணப்ப ஐடி மற்றும் பாஸ்வேர்டுகளை மறந்து விட்டதால், இணைய தளத்தில் இருந்து தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துள்ள வேறு ஏற்பாடும் செய்துள்ளது. ஹால்டிக்கெட்டுகளை https://trb.tn.gov.in இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
