சென்னை: பணியிலுள்ள ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டுமென உச்ச நீதிமன்றம் கடந்த செப்.1ம் தேதி அதிரடியாக உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழகத்தில் சுமார் 1.76 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதையடுத்து பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு அடுத்தாண்டு 3 சிறப்பு டெட் தேர்வுகளை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவித்தது. மேலும், தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு எஸ்சிஇஆர்டி மூலம் மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக பயிற்சிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி ஆசிரியர்களுக்கு டெட் தேர்வுக்கான பயிற்சி மாவட்டந்தோறும் இணையவழியில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 1 முதல் 10ம் வகுப்பு வரையான அனைத்து பாடங்களுக்கும் பயிற்சிக்கான வழிமுறைகளை இறுதி செய்து, நவம்பர் 17ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனம்(எஸ்சிஇஆர்டி) சார்பில் மாவட்ட பயிற்சி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
+
Advertisement

