சண்டிகர்: அரியானாவில் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மனிஷா(19) என்ற இளம்பெண் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 11ம் தேதி பள்ளியில் இருந்து வௌியேறிய மனிஷா, ஒரு நர்சிங் கல்லூரி சேர்க்கை பற்றி விசாரிக்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் 13ம் தேதி பிவானியில் உள்ள ஒரு வயல் பகுதியில் இருந்து மனிஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
19 வயது ஆசிரியையின் மர்ம மரணம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிவானி, சர்கி தாத்ரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மறியல் போராட்டங்கள் நடக்கிறது. மேலும் ஆசிரியை மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் பிவானி, சர்கி தாத்ரி மாவட்டங்களில் இணைய சேவைகளுக்கு 48 மணி நேர தடை விதிக்கப்பட்டுள்ளது.
* கடிதம் கண்டெடுப்பு
மனிஷாவின் உடலுக்கருகே தற்கொலை குறித்து அவர் எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டதாக பிவானி காவல் கண்காணிப்பாளர் சுமித் குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களும், மனிஷா பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கியதற்கான ஆதாரங்கள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.