Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிரியர் தகுதி தேர்வு உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனு: கல்வி அமைச்சர் தகவல்

சென்னை: ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுவை தமிழக பள்ளிக் கல்வித்துறை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் டெட் தேர்வில் 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

அவ்வாறு பெறவில்லை என்றால் பணியில் தொடரவும், பதவி உயர்வுக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் என்று தெரிவித்தது. தமிழகத்தில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அவர்களுடைய நியமனத்தின்போது நடைமுறையில் இருந்த சட்டங்களும், விதிகளும் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டே பணியமர்த்தப்பட்டனர். பல ஆண்டுகள் கழித்து புதிய தகுதி நிர்ணயம் செய்து, கட்டாய ஓய்வு என்னும் அச்சுறுத்தலை அளிப்பது நியாயமற்றதும் நிலைத்தன்மையற்றதுமாகும்.

இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வந்தால் பெருமளவிலான கட்டாய ஓய்வுகள் ஏற்பட்டு, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை உருவாகும். இதன் விளைவாக லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளது. பின்வரும் முக்கிய காரணங்களின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.

* 2009ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் பிரிவு 23ன் படியான குறைந்தபட்ச தகுதிகள் புதிய நியமனங்களுக்கு மட்டுமே பொருந்துகிறது. ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களை கட்டாய ஓய்வு பெறச் செய்வதற்கான அதிகாரத்தை இது வழங்கவில்லை.

* 23 ஆகஸ்ட் 2010ல் என்சிடிஇ வெளியிட்ட அறிவிப்பு, முதன்முதலில் டெட் அறிமுகப்படுத்தியது. அதில் அந்த தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கே இது பொருந்தும் என்றும், முன்பே நியமிக்கப்பட்டவர்களுக்கு இது பொருந்தாது என்றும் தெளிவாக கூறியுள்ளது.

* டெட் தேர்வை பிந்தைய தேதியில் இருந்து அமல்படுத்துவது, சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் உரிமைகளை பாதிப்பதோடு, மேலும், கல்வி அமைப்பின் நிலைத் தன்மையையும் அச்சுறுத்துகிறது. கல்வித்தரம் மற்றும் ஆசிரியர்களுக்கான நீதி ஆகிய இரண்டையும் உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.