கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 29 ஆண்டுக்கு பிறகு கைதான டெய்லர் ராஜாவை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம்: கர்நாடகாவில் தலைமறைவாக இருந்தது எப்படி? புதிய தகவல்
கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 29 ஆண்டுகள் தலைமறைவான முக்கிய குற்றவாளியான கோவையை சேர்ந்த சாதிக் (எ) டெய்லர் ராஜாவை கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். இவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: டெய்லர் ராஜா மீது குண்டு வெடிப்பு மற்றும் 1996ம் ஆண்டு கோவை பெட்ரோல் குண்டு வீசியதில் ஜெயிலர் பூபாலன் உயிரிழந்த வழக்கு, அதே ஆண்டு நாகூரில் சயீதா கொலை வழக்கு, 1997ம் ஆண்டு மதுரையில் சிறை அதிகாரி ஜெயபிரகாஷ் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் அவரை தீவிரமாக தேடி வந்தோம். இந்த தகவலை தெரிந்து கொண்ட டெய்லர் ராஜா தனது 20வது வயதில் கோவையை விட்டு வெளியேறி, தலைமறைவானார்.
15 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் விஜயபுராவுக்கு குடிபெயர்ந்து அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது அடையாளத்தை மறைத்து, தனது பெயரை ஷாஜகான் என்று மாற்றிக்கொண்டார். முதலில் அவர் கர்நாடகாவின் ஹூப்ளி என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். அங்கு அவர் தினசரி கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர், ஒரு கடையை தொடங்கி கடந்த 15 ஆண்டுகளாக காய்கறி, மிளகாய் விற்பனை செய்து வந்துள்ளார். இதன் ஏஜென்டாகவும் வேலை பார்த்துள்ளார்.
டெய்லர் ராஜா 20 வயதில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை சிறிது நாட்களிலேயே பிரிவில் முடிந்தது. வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக அந்த பெண், டெய்லர் ராஜா மீது வழக்கு தொடர்ந்தார். அதற்கு பயந்துதான் தலைமறைவானார். பின்னர், 2வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவரது வீட்டை சோதனை செய்த போது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஷாஜகான் என்ற பெயரில் பிற ஆவணங்களை வைத்திருந்தார். இவ்வாறு போலீசார் கூறினர். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெய்லர் ராஜாவை விரைவில் போலீசார் தங்கள் கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.