Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெய்லர் - டிராவிஸ் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம்; காதலுக்கு முன் மண்டியிட்ட அதிபர் டிரம்ப்: திடீர் பல்டி அடித்தது ஏன்? அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்: பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டை கடுமையாக வெறுப்பதாக வெளிப்படையாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது அவரது திருமண நிச்சயதார்த்தத்திற்கு மனதார வாழ்த்து தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவின் 2024 அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அப்போது அதிபர் போட்டிக்கு போட்டியிட்ட டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நான் டெய்லர் ஸ்விஃப்ட்டை வெறுக்கிறேன்!’ என்று ஆக்ரோஷமாக பதிவிட்டிருந்தார். அதோடு நிற்காமல், கடந்த மே மாதம், ‘நான் அவ்வாறு சொன்னதிலிருந்து, அவர் அழகாகவே இல்லை என்பதை யாராவது கவனித்தீர்களா?’ என்றும் கேள்வி எழுப்பி பெரும் சர்ச்சையைக் கிளப்பினார்.

இந்த அரசியல் மோதல்களுக்கு மத்தியில், 2023ம் ஆண்டு முதல் டெய்லர் ஸ்விஃப்ட்டும், அமெரிக்க கால்பந்து வீரர் டிராவிஸ் கெல்ஸும் காதலித்து வந்தனர். ஸ்விஃப்ட், கெல்ஸின் கால்பந்து போட்டிகளில் தவறாமல் கலந்துகொண்டு தனது காதலை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில், நேற்று தனது அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட டிரம்பிடம், டெய்லர் - டிராவிஸ் ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சற்றும் எதிர்பாராத வகையில், ‘சரி, அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கெல்ஸின் சிறந்த வீரர்; சிறந்த மனிதர் என்று நினைக்கிறேன். டெய்லரும் அற்புதமான பெண். எனவே, அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று பதிலளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

டிரம்ப் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்தபோதே, டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘உங்கள் ஆங்கில ஆசிரியைக்கும், உடற்கல்வி ஆசிரியைக்கும் திருமணம் நடக்கப் போகிறது’ என்ற சுவாரஸ்யமான தலைப்புடன் நிச்சயதார்த்தத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. டிரம்பின் இந்த திடீர் வாழ்த்துக்கு டெய்லர் ஸ்விஃப்ட் தரப்பிலிருந்தோ, டிராவிஸ் கெல்ஸ் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டெய்லர் ஸ்விஃப்ட் - டிராவிஸ் கெல்ஸ் ஆகிய இருவரின் சொத்து மதிப்பில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் குறித்த விவாதம் போய்கொண்டிருக்கிறது. ஃபோர்ப்ஸ் மற்றும் பீப்பிள் இதழ்களின் நிலவரப்படி, டெய்லர் ஸ்விஃப்ட்டின் நிகர சொத்து மதிப்பு சுமார் 1.6 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,300 கோடி) மதிப்பிடப்பட்டுள்ளது.

அழகுசாதனப் பொருட்கள் அல்லது ஆடை பிராண்டுகள் போன்ற துணை தொழில்கள் எதுவுமின்றி, இசை மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலமாக மட்டுமே பில்லியனர் அந்தஸ்தை எட்டிய முதல் இசைக் கலைஞர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். உலகளவில் அதிக வசூல் செய்த இசை நிகழ்ச்சியான இவரது ‘ஈராஸ் டூர்’ மட்டுமே 1.2 பில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. இத்துடன், மறுபதிப்பு செய்யப்பட்ட ஆல்பங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள் மூலம் கிடைக்கும் ராயல்டி மற்றும் 110 மில்லியன் டாலருக்கும் அதிகமான ரியல் எஸ்டேட் சொத்துக்களும் அவரது வருமானத்திற்கு வலு சேர்க்கின்றன. மறுபுறம், டிராவிஸ் கெல்ஸின் சொத்து மதிப்பு சுமார் 90 மில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.750 கோடி) உள்ளது. என்.எஃப்.எல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் ‘டைட் எண்ட்’ வீரர் என்ற பெருமையுடன், இதுவரை சுமார் 94 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார்.

கடந்த 2024ல் கன்சாஸ் சிட்டி சீஃப்ஸ் அணியுடன் அவர் செய்துகொண்ட இரண்டு வருட ஒப்பந்தத்தின் மதிப்பு 34.25 மில்லியன் டாலர் ஆகும். இதன்மூலம், ஆண்டுக்கு 17.125 மில்லியன் டாலர் சம்பளமாகப் பெறுகிறார். இருவரின் நிதி நிலைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது.