இ ந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த நாள் முதலே ஏழை, நடுத்தர மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். பணமதிப்பிழப்பு தொடங்கி, ஆண்டுதோறும் அரசியல் சட்டங்களை திருத்தி அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிய அரசு படாதபாடு படுத்தி வருகிறது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கோஷத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு வணிகர்களையும், பொதுமக்களையும் கசக்கி பிழிந்தது. இந்தியாவில் முன்பெல்லாம் மாநில வாரியாக மதிப்பு கூட்டு வரிகள் ஒவ்வொரு விகிதத்தில் காணப்பட்டன.
ஒரு பொருளுக்கு நாடு முழுவதும் ஒரே வரி என்கிற நோக்கில் கடந்த 2017ம் ஆண்டில் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பொருட்களின் தன்மை அடிப்படையில் 5 சதவீதம், 12, 18, 28 சதவீதம் என நான்கு விதமான ஜிஎஸ்டி வரிகள் விதிக்கப்பட்டு வந்தன. நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது, அனைத்து மாநிலங்களும் வருவாய் இழப்பை சந்தித்தன.
இந்த இழப்பை 5 ஆண்டுகளில் ஈடுகட்டுகிறோம் என கூறிய ஒன்றிய அரசு, இந்நிதியை வழங்குவதற்காக இழப்பீட்டு மேல் வரிகளையும் சில பொருட்களுக்கு விதித்தது. அதன் அடிப்படையில் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இழப்பீட்டு மேல்வரியை 40 சதவீதம் அளவுக்கு எதிர்கொண்டன. ஒன்றிய அரசு மாநிலங்களிடம் இருந்து அள்ளிச் சென்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பு நிதியினங்களை திருப்பி தருவதிலும் பல்வேறு நாடகங்களை நடத்தியது. தமிழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஜிஎஸ்டி நிதியை திருப்பி தருவதில் பாராபட்சம் காட்டியது.
இந்நிலையில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு, தங்கள் ஆட்சியில் ஜிஎஸ்டி வரிவிகிதங்களால் மட்டுமே பொதுமக்கள் கஷ்டப்படுவதாக திடீர் ஞானாதேயம் பிறந்துள்ளது. அதன் அடிப்படையில் தீபாவளிக்கு பரிசளிக்கிறோம் என்ற பெயரில் இப்போது வரிவிகிதங்களை குறைக்க முன்வந்துள்ளனர். ஏற்கனவே 4 அடுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில், 12 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய இரண்டும் இப்போது நீக்கப்பட்டுள்ளன. இன்று முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 5 மற்றும் 18 சதவீதம் வரிவிதிப்புகள் மட்டுமே அமலில் இருக்கும்.
இந்த வரிக்குறைப்பால் கடுகு முதல் கார்கள் வரை விலை குறையும் என கூறப்படுகிறது. குறிப்பாக சில விலையுயர்ந்த கார்களின் விலை ரூ.2.5 லட்சம் வரை குறைய உள்ளது. பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு, பற்பசை, எண்ணெய், ஷேவிங் கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரிவிதிப்பு 5 சதவீதமாக குறைகிறது. ஏசி, டிவி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களுக்கான வரிவிகிதம் 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது.
இந்த வரிக்குறைப்பால் சாதாரண, நடுத்தர மக்கள் பயன்பெறுவர் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம் இந்த வரிக்குறைப்பை நுகர்வோர்களை சென்றடைய உற்பத்தியாளர்களும், நிறுவனங்களும் விலையை குறைத்திட வேண்டும். அதை கண்காணிப்பதும் ஒன்றிய அரசின் கடமையாகும். ஜிஎஸ்டி வரிவிகிதம் மறுசீரமைப்பு காரணமாக நாட்டிற்கு ஒட்டுமொத்தமாக ரூ.1.1 லட்சம் ேகாடி வரை இழப்பு ஏற்படும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களின் வாங்கும் சக்தி கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த இழப்பீட்டு தொகையை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பல மாநில அரசுகள் வருவாய் இழப்பு குறித்து கவலை கொண்டுள்ளன. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்து வரும் நிலையில், உள்நாட்டில் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு வணிகர்களுக்கு சற்றே ஆறுதலை தரக்கூடும்.