Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4 அடுக்கு விகிதங்களுக்குப் பதிலாக 5%, 18% வரி 2 அடுக்கு ஜிஎஸ்டியை அமல்படுத்த திட்டம்: நிதியமைச்சகம் முன்மொழிவு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரியை விதிப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாநில வரிகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்றிய கலால் வரி, சேவை வரி, கூடுதல் கலால், சுங்க வரிகள், சிறப்பு கூடுதல் வரிகள் மற்றும் மாநில வரிகளான வாட் வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி, விளம்பர வரி, லாட்டரி, பெட்டிங், சூதாட்டம் மீதான வரிகள், மாநில செஸ் வரி போன்றவை இதில் இணைக்கப்பட்டன.

பொதுவாக 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என 4 வரி அடுக்குகளாக இவை பிரிக்கப்பட்டன. தங்கம், வெள்ளி, ராசிக்கற்கள், கவரிங் போன்ற மிகச்சிலவற்றின் மீது 3 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. ஆனால், பொதுவான ஜிஎஸ்டி அடுக்குகளில் ஒன்றாக இது கருதப்படவில்லை என்பதால், 4 வரி அடுக்கு முறை என்றே கூறப்பட்டது. ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு நேரடி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதனை ஈடுகட்ட மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க ஒன்றிய பாஜ அரசு ஒப்புக் கொண்டது. பின்னர் மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று தற்போது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வழங்க உறுதி அளித்துள்ளது. இதற்காக பான் மசாலா, கார்கள் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு பல்வேறு விகிதங்களில் இழப்பீட்டு செஸ் வரி விதிக்கப்படுகின்றது.

இழப்பீடு செஸ் வரி நடைமுறை 2026ம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவதால், இந்த வரி விதிக்கப்படும் பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் புதிய வழிமுறையை உருவாக்க வேண்டியுள்ளது. இது குறித்து விவாதிக்க ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் வரும் செப்டம்பரில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே ஜிஎஸ்டி விகிதங்களை சீரமைப்பதற்கான அமைச்சர்கள் குழுவிடம் இது தொடர்பான முன்மொழிவை நிதியமைச்சகம் சமர்ப்பித்துள்ளது. அதில், 2 அடுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை அமல்படுத்த உத்தேசித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, 5, 12, 18 மற்றும் 28 ஆகிய 4 வரி அடுக்குகளில் இனி 5% மற்றும் 18 சதவீதம் மட்டுமே அமலில் இருக்கும் எனவும், 28 சதவீத வரிப்பிரிவுக்குப் பதிலாக 40 சதவீத வரிப்பிரிவு அமல்படுத்தப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 28 சதவீத வரி என்பது, உயர் ரக மோட்டார் சைக்கிள்கள், ஏசி, பிரிட்ஜ், சொகுசு கார்கள், சிகரெட், புகையிலை போன்ற உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் மீது விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக 40 சதவீதம் என்ற சிறப்பு வரிப்பிரிவு சேர்க்கப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: 12 சதவீத வரிப்பிரிவில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விதிப்பு பட்டியலில் சேர்க்கப்படும். இதுபோல், 28 சதவீத வரி பட்டியலில் உள்ளவற்றில் 90 சதவீத பொருட்கள் 18 சதவீதத்தில் சேர்க்கப்படும்.

இதனால் வரிச்சுமை குறையும். , என்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொருட்களுக்கு சிறப்பு விகிதங்களுடன் இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி விகித கட்டமைப்பை நிதியமைச்சகம் முன்மொழிந்துள்ளது. அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் நடப்பு நிதியாண்டிற்குள் செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கான தீபாவளி பரிசாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்த உடனேயே ஒன்றிய அரசு ஜிஎஸ்டி குறித்த திட்டத்தை அமைச்சர்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* யாருக்கு சாதகம்?

வரி வசூலை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஒன்றிய பாஜ அரசு, ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்தே மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் இலக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. 2017ம் ஆண்டு ஜூலையில் ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோது ரூ.92,283 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஜூலை மாதத்தில் ரூ.1.96 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.

வரி வசூல் குவிந்து கொண்டே இருந்தாலும், மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை அளிப்பதிலும், இழப்பீட்டு வரியை அளிப்பதிலும் தாமதம் செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்டையில் மட்டுமே சில அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது அல்லது விலக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய வரி விதிப்பு உண்மையிலேயே மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க உதவுமா அல்லது தற்போது 28 சதவீதத்தில் ஏசி, பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் கார்கள் விலையை அபரிமிதமாக உயர்த்த வழி வகுக்குமா என்பது அதனை அமல்படுத்தும்போதுதான் தெரிய வரும் என்கின்றனர் நிபுணர்கள்.