ஆயுள், மருத்துவ காப்பீடு சேவைக்கு வரி விலக்குக்கு வரவேற்பு; மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
சென்னை: ஜிஎஸ்டி வரி சீரமைப்பு நடவடிக்கைகளில் மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். டெல்லியில் நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 56வது கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் கருத்துக்களை எடுத்துரைத்தார். அப்போது அவர், தனிநபர் ஆயுள், மருத்துவ காப்பீட்டு சேவைகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட ஜிஎஸ்டி சீரமைப்பு நடவடிக்கைகளை வரவேற்றார்.
அதேநேரத்தில், மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசியலமைப்பு திருத்தம் மூலம் தற்போதைய மேல் வரியை தொடரலாம் அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்டத் திருத்தம் மூலம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள், ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டும் உச்ச வரிவரம்பினை அதிகரிக்கலாம் என்றும் அமைச்சர் பரிந்துரைத்தார்.
ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித்தீர்வு நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கு, அலுவலர்கள் குழுவின் அறிக்கையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இக்குழுவின் பரிந்துரைகளை இவ்வருட டிசம்பர் மாத இறுதிக்குள் செயல்படுத்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்றுமதி மற்றும் தலைகீழ் வரி அமைப்பின் கீழ் தற்காலிகமாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரியினை திரும்பப் பெறுவதற்கான தானியங்கி வழிமுறையினை அமைச்சர் வரவேற்றார். வணிகம் செய்வதை எளிமைப்படுத்துவதற்கான, சிறு இடர் அளவுரு கொண்ட வணிகங்களுக்கு எளிதாக்கப்பட்ட பதிவு முறையினை அமைச்சர் பாராட்டினார்.
உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கு இழப்பீட்டு மேல்வரி விதிக்கும் காலத்தை அக்டோபர் முதல் 2 அல்லது 3 மாதங்களுக்கு நீட்டிக்க சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றம் பரிந்துரைத்துள்ளதால், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றம் பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இக்கூட்டத்தில், நிதித் துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்னிட், வணிகவரி ஆணையர் எஸ்.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.