டெல்லி: டாடா குழுமத்திற்கு வெடித்துள்ள அதிகார மோதலை தொடர்ந்து நிறுவனத்தின் நிலை தன்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியமன இயக்குநர்களை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக டாடா டிரஸ்ட்டின் அரங்காவலர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலாக மாறி உள்ளது. செப்.11ம் தேதி நடைபெற்ற டாடா டிரஸ்ட்டின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டத்தில் டாடா டிரஸ்ட்டின் தலைவர் நோயல் டாடா மற்றும் துணைத் தலைவரும், அறங்காவலருமான வேணு சீனிவாசன் ஆகியோர் முன்னாள் பாதுகாப்பு செயலர் விஜய் சிங்கின் மறு நியமனத்தை முன்மொழிந்துள்ளனர்.
இதனை அறங்காவலர்களின் ஒருவரான மேஹாலி மிஸ்டரி உள்ளிட்ட 4 அறங்காவலர்கள் விஜய் சிங்கின் மறு நியமனத்தை எதிர்த்ததால் பிரச்சனை ஏற்பட்டது. அதில் மூவர் இணைந்து மெஹலி மிஸ்ட்ரியை நியமிக்க முன்மொழிந்த நிலையில், அதனை சீனிவாசன் நிராகரித்ததால் பதற்றம் பற்றி கொண்டது. இந்த சூழலில் டாடா குடும்ப விசுவாசியாக அறியப்படுவோர் விஜய் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், நோயல் டாடாவை பதவியில் இருந்து இறக்க மெஹலி மிஸ்ட்ரி தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18 விழுக்காடு பங்குகளை வைத்துள்ள ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்துடன் மெஹலி மிஸ்ட்ரிதொடர்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா, துணைத் தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தனர். அப்போது நிறுவனத்தின் நிலைத்தன்மையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த விவகாரம் டாடா சன்ஸ் நடவடிக்கைளை பாதிக்கும் வகையில் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், நிறுவனத்தின் நலனுக்கு எதிராக இருக்கும் அறங்காவலர்களை நீக்குவது உட்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி ஒன்றிய அரசு கேட்டுள்ளது. இப்படியான பரபரப்பான சூழலில் அறங்காவலர் குழு மீண்டும் கூட உள்ளது.