டாஸ்மாக் அலுவலகங்களில் சோதனை நடத்தியது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: மாநில அரசின் உரிமையில் தலையிடுவதா? உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
* அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
புதுடெல்லி: டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியது கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசின் உரிமையில் தலையிடும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது. சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என்று அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை மூன்று நாட்கள் சோதனை நடத்தினர்.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கூறி இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்திருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.
மேற்கண்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் 41 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்குகளை பதிவு செய்ய கூறியது தமிழக அரசுதான் என தெரிவித்ததோடு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திடீரென அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தியதோடு, ஊழியர்களின் செல்போன்கள், மென்பொருள்கள், கணினிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
இவ்வாறு எப்படி செய்ய முடியும்? சிலர் ஒருவேளை தவறு செய்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? என கேள்வி எழுப்பினர். இப்போது அமலாக்கத்துறை ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எந்த வழக்காக இருந்தாலும் உடனடியாக ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டம் உள்ளிட்டவற்றை அவர்களாக கையில் எடுத்து ஒரு நிறுவனத்திற்கு சோதனைக்கு வருகிறார்கள்.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர்கள், சில தகவல்களின் அடிப்படையிலே சோதனையை நடத்தப்பட்டது. அதேவேளையில் அந்த சோதனை நடந்த போது அனைவரும் கண்ணியமாக நடத்தப்பட்டனர் என்றதோடு, மிகப்பெரும் அளவில் ஊழல் நடந்திருப்பதும் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பு, இந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக அல்லது முறைகேடாக அதிக விலையில் மதுபானம் விற்கப்பட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்தது தமிழ்நாடு அரசுதான்!
ஒருவேளை இவர்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்து இருந்தால், அதை விசாரணை நடத்திக் கொண்டு இருக்கக்கூடிய அமைப்புக்கு தகவல் தெரிவித்து இருக்கலாம் என்றதோடு \\\\”கூட்டாட்சி தத்துவத்தை அமலாக்கத்துறை மொத்தமாக மீறி இருக்கிறது\\\\” என்றனர். மேலும், அரசு நிறுவனத்திற்குள் நுழைந்து அவர்களுடைய செயல்பாட்டை எப்படி தடுக்க முடியும்? அதற்கான அதிகாரம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு எதிர் வாதம் வைத்த அமலாக்கத்துறை, மதுபான ஊழல் விவகாரத்தில் அதிக அளவிலான சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அதனால் தான் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு சோதனை மேற்கொண்டதாகவும், நாங்கள் ஒரு சோதனை மட்டுமே மேற்கொண்டோம். தற்போது எங்களுக்கு இருக்கக்கூடிய புகாரின் அடிப்படையில் மிகப்பெரிய அளவிலான ஊழல் டாஸ்மாக்கில் நடந்திருக்கிறது என்றனர்.
அதற்கு, சட்டம் ஒழுங்கு மாநிலத்தின் கையில் இருக்கும் போது அது தொடர்பான விவகாரங்களுக்குள் எப்படி அமலாக்கத்துறை நுழைய முடியும்? அவர்களிடம் சில தகவல்கள் இருந்தாலும் எப்படி அவர்கள் ஒரு அரசு நிறுவனத்திற்குள் நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்க முடியும்? என தமிழக அரசு தரப்பு கேள்வி எழுப்பினர். அதற்கு மாநில அரசு அல்லது மாநில காவல் துறை விசாரிப்பது ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் அடிப்படையில் மட்டுமே! ஆனால் நாங்கள் சட்ட விரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து விசாரணை செய்கிறோம் என்றனர்.
தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், டாஸ்மாக் நிறுவனத்திற்குள் நுழைந்து ஊழியர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதிலிருந்து எந்த ஒரு அனுமதியுமின்றி தரவுகளை பதிவிறக்கம் செய்திருக்கும் நிலையில் இது தனி நபர் உரிமையை மீறக்கூடிய செயல் என வாதிட்டனர். மேலும், கண்ணியக் குறைவாக டாஸ்மாக் நிறுவன அலுவலக ஊழியர்களை அமலாக்க துறையினர் நடத்தினர் என்றும் குற்றம் சாட்டினர்.
வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமலாக்கத்துறைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அதில், அமலாக்க துறையின் நடவடிக்கை நீங்கள் மேற்கொள்ளும் விசாரணை அனைத்தையும் கடந்த ஆறு ஆண்டுகளாக நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அதில் நல்லவிதமாக சொல்லும் அளவிற்கு ஒன்றுமே கிடையாது. அது குறித்து கூடுதலாக எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ஒருமுறை அது குறித்து நான் குறிப்பிட்டது அனைத்து இடங்களிலும் பதிவாகி இருந்தது. உங்களது விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா?, மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்ற சந்தேகம் இருந்தால் அவர்களது உரிமையில் உடனடியாக அமலாக்கத்துறை அதில் தலையிடுமா?, சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?, அவர்கள் கூட்டாட்சி தத்துவம் தொடர்பாக கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு உங்களிடம் விடை உள்ளதா? என்றார்.
தொடர்ந்து உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகலில் உச்சநீதிமன்றம் மீண்டும் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலே அமலாக்கத்துறை இந்த வழக்கில் ஆர்வம் காட்டுகிறது என கூறியதோடு, தேர்தலுக்குப் பிறகு இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஆர்வம் காட்டாது என தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் கூறியதில், ‘‘அமலாக்கத்துறை வழக்கில் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜி பெயர் உள்ளதே? பல்வேறு வழக்குகளின் விசாரணை செந்தில் பாலாஜியை நோக்கி செல்கிறதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர், ‘‘செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தர பணம் பெற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீன் பெற்றவர்.
ஆனால் டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கும் இதில் தொடர்பு உள்ளது என குற்றம் சாட்டினார். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு அமலாக்கதுறை, வழக்கு தகவல் அறிக்கையை தங்கள் தரப்புக்கும் வழங்கினால் அதுகுறித்து விளக்கங்கள் நீதிமன்றத்தில் வழங்க முடியும் என்றதோடு, செந்தில் பாலாஜியை வழக்கில் தொடர்புபடுத்தி விசாரிக்க வேண்டும் என்பதை அமலாக்கத் துறையின் நோக்கமாக உள்ளது என குற்றம் சாட்டினர்.
ஆனால் தமிழக அரசின் வாதத்தை எதிர்த்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியை கைது செய்த விசாரிப்பது எங்கள் நோக்கம் அல்ல என தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்ததோடு டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் முந்தைய இடைக்கால உத்தரவு தொடரும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
* கடந்த ஆறு ஆண்டுகளாக அமலாக்க துறை விசாரணையில் நல்லவிதமாக சொல்லும் அளவிற்கு ஒன்றுமே கிடையாது.
* உங்களது விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா?
* மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்ற சந்தேகம் இருந்தால் உடனடியாக அமலாக்கத்துறை அதில் தலையிடுமா?
* சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?