டாஸ்மாக் ரெய்டு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறைக்கு விதித்த தடை உத்தரவு தொடரும்: சுப்ரீம் கோர்ட்டில் 18ம் தேதி விசாரணை
டெல்லி: டாஸ்மாக் அலுவலக சோதனை வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர்வதாக அறிவித்த உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் 18ம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) தலைமை அலுவலகம் உட்பட சுமார் 20 இடங்களில், கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டனர். மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை முறைகேடாக வசூலித்தது, மதுபான ஆலைகளுடன் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு இருந்தது, கொள்முதலைக் குறைத்துக் காட்டியது, பணியிட மாற்றம் மற்றும் பார் உரிமம் வழங்க லஞ்சம் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை தனது அறிக்கையில் கூறியிருந்தது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்குத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாகத் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் என்பது தேச நலனுக்கு எதிரானது என்றும், 2017 முதல் 2024ம் ஆண்டு வரை பதியப்பட்ட 41 முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையிலேயே சோதனை நடைபெறுவதாகவும் கூறி, அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த மே 22ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை அமர்வு, இவ்விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததுடன், டாஸ்மாக் அலுவலக சோதனை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு வரும் 18ம் தேதி விசாரணைக்கு வரவிருப்பதால், அதனை ஒத்திவைக்காமல் அதே தேதியில் விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் எனத் தெரிவித்தார்.