டெல்லி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ED விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோர் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜராகி வாதிட்டனர். டாஸ்மாக் வழக்கை மாநில அரசு விசாரணை நடத்திவரும் நிலையில் அமலாக்கத்துறை தலையிடும் அதிகாரமில்லை என்றும் கூட்டாட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்றும் தமிழ்நாடு அரசுத்தரப்பு தெரிவித்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கை தமிழ்நாடு அரசு விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை ஏன் தலையிட்டது?, இது மாநில அரசின் கூட்டாட்சி உரிமைக்கு எதிரானது இல்லையா?, சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது?, அமலாக்கத்துறை மாநில வரம்பிற்குள் ஏன் தலையிடுகிறது? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அமலாக்கத்துறை விசாரணையின்போது, பெண்கள் உட்பட டாஸ்மாக் நிறுவன ஊழியர்கள் 40 மணி நேரம் சிறைபிடித்து வைக்கப்பட்டனர். அமலாக்கத்துறையின் இந்த செயல் சட்ட மீறல் இல்லையா?. அவர்களுடைய அலைபேசிகளை கைப்பற்றி தரவுகளை பதிவிறக்கம் செய்தது உரிமை மீறல் இல்லையா?
அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.