காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே மேட்டுப்பாறையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை, அதனுடன் இணைந்த பார் செயல்படுகிறது. கடை மற்றும் பார் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜ செயலாளர் விஜயகுமார் (48) என்பவரது இடத்தில் உள்ளது. இந்த கடையை, திருப்பூரைச் சேர்ந்த அழகர்சாமிக்கு உள்வாடகைக்கு விஜயகுமார் விட்டுள்ளார். இதில், வாடகை பணம் தொடர்பாக விஜயகுமாருக்கும், அழகர்சாமிக்கும் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி (வியாழன்) காலை 10 மணி அளவில் பாஜ செயலாளர் விஜயகுமார், கார், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் அடியாட்களுடன் பாருக்கு சென்று அங்கு வேலை செய்தவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். இதில், திருப்பூர் குமார்நகர் கார்த்திக் (25), கருப்புசாமி (22), பெத்தசாமி (25), ஆனந்த் (20) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
புகாரின்பேரில் ஊதியூர் போலீசார் வழக்குப்பதிந்து, பங்காம்பாளையம் சுரேஷ் (25), திருப்பூர் மனோஜ்குமார் (27) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்தனர். அடியாட்களை அழைத்துச்சென்ற பாஜ மாவட்ட செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் விஜயகுமார், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார், விஜயகுமாரை கைது செய்து, காங்கயம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


