காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்; தமிழ்நாடு முழுவதும் நவம்பருக்குள் விரிவாக்கம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
சென்னை: சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி டாஸ்மாக் நிர்வாகம் அமல்படுத்தியது.
அதன்படி, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது கூடுதலாக ரூ.10 விற்க வேண்டும். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் ரூ.10 அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்பதாகும். அந்தவகையில் பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை, நாகை, திருவாரூர், தர்மபுரி, தேனி மற்றும் குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும், இதை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்தவகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்கள் விரிவாக்கம் செய்வதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் இறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘ டாஸ்மாக் கடைகளில் இருந்து காலி மதுபான பாட்டில்களை பெறும் திட்டம் 9 மாவட்டங்களில் அமலில் உள்ளது. மேலும், 7 மாவட்டங்களில் பகுதி அளவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.