Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் 5,324 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1009 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு

*கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 5,324 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2025-26ம் ஆண்டில் ரூ.1009 கோடி அளவுக்கு வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இதுவரை ரூ.487.9 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புற பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை மகளிரை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழு அமைத்தல், பயிற்சிகள் வழங்குதல், மக்கள் அமைப்புகளை உருவாக்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான கடன் பெற்று தருதல், வாழ்வாதார தொழில்களில் ஈடுபட வைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தகுதியான நபர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தைச் செயல்படுத்துதல் போன்ற பணிகளும் மகளிர் சுய உதவிக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக நகர்ப்புற பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் அமைத்தல் பயிற்சி வழங்குதல், நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலமாக சேவைகள் வழங்குதல் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் மற்றும் தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகளும் முனைப்புடன் நடந்து வருகின்றன.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் பெறுதல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் அரசின் மூலமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக எய்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2025-26ம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5,324 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1009 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.487.9 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தகுதியான குழுக்களை தரமதிப்பீடு செய்து வங்கிகள் மூலமாக கடன் பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.