தாராபுரம், காங்கேயம் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு: தேர்தல் பணியில் முழுவீச்சில் ஈடுபட அறிவுறுத்தல்
சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இதுவரை அவர் 105 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது சட்டப்பேரவை வாரியாக தொகுதி நிலவரம் குறித்து அறிந்து வருகிறார். மேலும் கட்சி நிர்வாகிகள் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்து வருகிறார். சரியாக செயல்படாத நிர்வாகிகளை கடுமையாக எச்சரித்து வருகிறார். அவர்கள் ஒழுங்காக செயல்பட அறிவுரை வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாராபுரம், காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது அவர் சட்டப்பேரவை தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார். தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளது. எனவே, தேர்தல் பணியில் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும். கடந்த தேர்தலை விட வரும் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு வியூகங்கள் அமைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும். திமுக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை மக்களை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.


