திருப்பூர்: திருப்பூரில் தார் சாலை அமைக்க ஆட்சேபனை தெரிவித்த முதியவரை போதையில் காரை ஏற்றி கொலை செய்த பேரூராட்சி தலைவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், மங்கலம் அடுத்த சாமளாபுரம் கருகம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (57). இவர், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்று டூவீலரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். சாமளாபுரம்-காரணம்பேட்டை சாலையில் வந்தபோது, அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று, பழனிசாமியின் டூவீலர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் மீது மோதிய கார் நிற்காமல் சென்றது.
இதுகுறித்து மங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பிச்சென்றது சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிசாமி (60) என்பதும், போதையில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தபட்டார். தொடர் விசாரணையில் கருக்கம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் முறைகேடாக தார் சாலை அமைக்கப்படுவதாக பழனிசாமி மற்றும் அவரது நண்பர் அம்மாசியப்பன் ஆகியோர் பேரூராட்சி நிர்வாக பொறியாளரிடம் மனு அளித்தனர். அந்த ஆத்திரத்தில் டூவீலரில் சென்ற பழனிசாமியை, போதையில் பேரூராட்சி தலைவர் பழனிசாமி கார் ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிந்து பேரூராட்சி தலைவர் பழனிசாமியை நேற்று கைது செய்தனர்.