*சீரமைக்க கோரிக்கை
உடன்குடி : உடன்குடி அருகே தாண்டவன்காடு - பிச்சிவிளை கருமேனி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் ஆபத்தான நிலையில் இருப்பதால் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடன்குடி, தாண்டவன்காடு, பிச்சிவிளை, காரங்காடு, சிவன்குடியேற்று, பெருமாள்புரம், அழகப்பபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி தாண்டவன்காடு -பிச்சிவிளை கிராமங்களுக்கிடையே கருமேனி ஆற்றின் குறுக்கே சுமார் 15ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் கட்டப்பட்ட சில ஆண்டுகளில் பாலம் சேதமடைய துவங்கியது.
இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு கருமேனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலம் பலத்த சேதமடைந்தது.
இதனால் ஆற்றில் வெள்ளம் சென்ற போது 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல மைல் தூரம் சுற்றி உடன்குடிக்கு வந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர். எனவே ஆபத்தான இந்த பாலத்தை முற்றிலும் அகற்றி விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையில் பாலம் மேலும் பலத்த சேதமடைந்துள்ளது. மீண்டும் கருமேனி ஆற்றில் வெள்ளம் வந்தால் பாலம் கடுமையான சேதமடைந்து விடும். எனவே ஆபத்தான நிலையில் உள்ள தாண்டவன்காடு - பிச்சிவிளை பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.


