Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள் என அயலக மண்ணில் நிரூபித்துள்ளீர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: லண்டன் மாநகரத்தில் மாபெரும் தமிழ்க் கனவு - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது முதல்வர் பேசியதாவது: தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள், கடுமையான உழைப்பாளிகள் என்று நீங்கள் எல்லோரும் இந்த அயலக மண்ணில் நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய இந்தப் பயணத்தின் நிறைவாக உங்களை எல்லாம் இங்கே நான் சந்திக்க வந்திருக்கிறேன். சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல், இதனால்தான், தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றது. தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்லுகின்ற தூதர்களாக இங்கே இருக்கின்ற உங்களை எல்லாம் நான் பார்க்கின்றேன். உங்களை பார்க்கும்போதே, இங்கே இருக்கின்றவர்களுக்கு நம்முடைய தமிழ்நாட்டைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் வரும்.

அந்த வகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்ற நீங்கள் எல்லோரும் தமிழ்நாட்டின் அன் அபிசியல் அம்பாஸ்டர். தமிழர்களின் வரலாற்றை, பண்பாட்டை வெளிக்காட்ட கீழடியைத் தொடர்ந்து, பொருநை அருங்காட்சியகம், கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் என்று அமைத்துக் கொண்டு வருகிறோம். நம்முடைய குழந்தைகளுக்கு அதையெல்லாம் சுற்றி காண்பித்து, நம்முடைய வரலாற்றை எடுத்துச் சொல்லுங்கள். எப்போதும் தமிழர்களுக்குள்ளே ஒற்றுமை நிலவவேண்டும். இந்த இனம் எப்போதும் முன்னேற்றப் பாதையில் மட்டும்தான் பயணிக்கவேண்டும். அதற்காகத்தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்களும் உங்களை அன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் தான், நம்முடைய திராவிட மாடல் அரசில், அயலகத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக ஏராளமான திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை உங்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துறை சார்பில், செய்து கொண்டிருக்கின்ற முக்கியமான சில முன்னெடுப்புகளை மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், கடந்த நான்கு ஆண்டுகளாக, ஜனவரி 12ம் நாளை, அயலகத் தமிழர் நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு மட்டும், இந்த விழாவுக்கு 62 நாடுகளிலிருந்து தமிழர்கள் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். அயலகத் தமிழர் நலவாரியம், அயலகத் தமிழர்களுக்கான டோல்-ப்ரீ ஹெல்ப்லைன், புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சுழல் நிதி, தமிழ்நாட்டிற்கு வெளியே வாழுகின்ற தமிழர்களுக்கு இன்ஷூரன்ஸ் என்று ஏராளமான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம்.

வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடோடி வந்து உதவுகின்றோம். இது எல்லாவற்றையும்விட, மிக முக்கியமான திட்டம்தான், “வேர்களைத் தேடி” என்ற திட்டம். புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளை, மாணவர்களை தங்களுடைய வேர்கள் இருக்கின்ற நம்முடைய தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று, நம்முடைய வரலாற்றை, பண்பாட்டை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம். இப்படி தமிழ்நாட்டிற்கு வந்த பலர், சில தலைமுறைகளாக விட்டுச் சென்ற சொந்தங்களை தேடிக் கண்டுபிடித்து உருகி இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரைக்கும், வாழ்வதும், வளர்வதும், தமிழும் தமிழ் இனமுமாய் இருக்கவேண்டும். கலைஞர்தான் சொல்வார், “தமிழர்களாக ஒரு கூட்டத்திற்கு வந்து அமர்ந்து, எழுந்து செல்லும் போதும் தமிழர்களாக கலைந்து செல்லும் காலம் வந்தால் அதுதான் நான் எதிர்பார்க்கும் லட்சிய வெற்றி!” என்று சொல்வார்.

அந்தளவுக்கு வேற்றுமைகள் நிறைந்திருந்த சமூகம் இன்றைக்கு, இவ்வளவு ஒற்றுமையாக இருப்பதுதான் நம்முடைய வெற்றி. தமிழர்கள் உலகத்திற்கானவர்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னவர்கள் - பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவர்கள் - இந்தப் பெருமையை, அடையாளத்தை நம்முடைய செயல்களால் நிலைநாட்டவேண்டும். சாதி, மதம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள், நம்மை பிரிப்பதோடு, நம்முடைய இனத்தையே வளரவிடாது. நம்மை எதுவெல்லாம் பிரிக்குமோ, அதையெல்லாம் நாம் மறக்கவேண்டும்! எதுவெல்லாம் நம்மை இணைக்குமோ, அதையெல்லாம் நாம் நினைக்கவேண்டும். எனவே, தமிழ் என்ற வேரில் வளர்ந்திருக்கும் நாம், நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது. அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வாருங்கள், உங்களுக்காக உங்கள் சகோதரனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அங்கே இருப்பான்.

அந்த நம்பிக்கையோடு வாருங்கள். இங்கே நீங்கள் கொடுத்திருக்கின்ற வரவேற்புக்கும், விருந்தோம்பலுக்கும் என்னுடைய அன்புதான், என்னுடைய நன்றி! என்பதை நான் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன் - பெருமைப்படுகிறேன் - பூரிப்படைகிறேன் - புலங்காகித உணர்வோடு நின்று கொண்டிருக்கிறேன். நான் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு, எத்தனையோ மாநிலங்களுக்கு, எத்தனையோ நாடுகளுக்கு அரசின் சார்பில் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில், மேயராக இருந்து பொறுப்பேற்று பல நாடுகளுக்கு சென்றிருக்கக்கூடிய அந்த நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்க்கிறேன். இப்போது தமிழர்களாக இருக்கக்கூடிய உங்களை எல்லாம் சந்திக்க வந்திருப்பதில்தான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எல்லையில்லா அன்போடும், மறக்க முடியாத நினைவுகளோடும் தான் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும், மீண்டும் என்னுடைய இதயபூர்வமான நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.