Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிட்வா புயலால் இலங்கையில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 166 பேர் விமானத்தில் சென்னை வந்தனர்: உணவு, குடிநீர் இல்லாமல் தவிப்பு

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து விமானங்கள் மூலம் இலங்கைக்கு சுற்றுலா பயணிகள், வியாபாரம் நிமித்தமாக சென்றவர்கள், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் இலங்கை வழியாக டிரான்சிட் பயணிகளாக வந்தால் டிக்கெட் கட்டணங்கள் குறைவு என்பதால் அவ்வாறு துபாயிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என்று ஏராளமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இலங்கையில் தங்கியிருந்தனர்.

ஆனால், கடந்த மூன்று தினங்களாக டிட்வா புயல் கனமழை வெள்ளம், இலங்கையை புரட்டி போட்டு விட்டது. இதனால் இலங்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதனால் இலங்கையில் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் கடந்த மூன்று நாட்களாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து சொந்த அலுவல்களாக இலங்கை சென்றவர்கள், மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து, உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து, சென்னை அல்லது திருச்சிக்கு விமானங்களில் திரும்பி வருவதற்கு, கொழும்பு விமான நிலையத்தில் வந்து தஞ்சம் அடைந்து இருந்தனர்.

ஆனால் விமான சேவை இல்லாததால் இவர்கள் உடனடியாக தமிழ்நாட்டுக்கு விமானங்களில் திரும்பி வர முடியவில்லை. அதோடு அங்கு பெருமழை வெள்ளம் காரணமாக, உணவு விடுதிகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் இவர்கள் உணவு குடிநீர் கூட கிடைக்காமல் 3 நாட்களாக இலங்கையில் தவித்துக் கொண்டு இருந்தனர். இந்த தகவல் மீடியாக்கள் மூலம், தமிழ்நாடு அரசுக்கு தெரிந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தது. உடனடியாக தூதரக அதிகாரிகள் கொழும்பு விமான நிலையத்திற்கு சென்று அங்கு தவித்துக் கொண்டிருந்த தமிழர்கள் உள்பட இந்தியர்கள் அனைவருக்கும் உணவு போன்ற வசதிகளை செய்து கொடுத்தனர். இவ்வாறு மூன்று நாட்கள் தவித்த, 189 பேர் நேற்று இரவு விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தனர். அப்போது பயணிகள் வேதனை தெரிவித்தனர்.

மதுரையைச் சேர்ந்த ஜெனித் மற்றும் செய்யது அப்துல் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் ரியாத்தில் இருந்து இலங்கை வழியாக சென்னை வருவதற்காக வியாழக்கிழமை இரவு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரியாத்தில் ஏறினோம். இலங்கை கொழும்பு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தரை இறங்க வந்த விமானம் தரையிறங்க முடியாமல், அங்கிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு சிறிய விமான நிலையத்தில் கொண்டு தரை இறக்கினர். அங்கு விமானத்துக்குள் 3 மணி நேரம் உட்கார்ந்து இருந்தோம். அதன் பின்பு எங்களை இறக்கி பேருந்து மூலம் கொழும்பு விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் பல மணி நேரம் தவித்தோம்.

எங்களுடைய தவிப்பு செய்தி ஊடகங்கள் மூலமாக, தமிழக அரசுக்கு தெரிந்ததும், இங்கிருந்து அமைச்சர் நாசர் எங்களோடு செல்போனில் பேசினார். அதன்பின்பு இலங்கையிலுள்ள தூதரக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து எங்களுக்கு உணவு குடிநீர் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். ஆனால் எங்களை சென்னைக்கு அழைத்து வர வேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், எந்தப் பொறுப்பையும் எடுக்கவில்லை. இவ்வாறு வெள்ளி, சனி இரண்டு நாட்கள் கொழும்பு விமான நிலையத்திலேயே தூக்கம் கூட இல்லாமல் உட்கார்ந்து இருந்தோம். இன்று எங்களுடைய சொந்த செலவில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து சென்னை வந்து சேர்ந்திருக்கிறோம்.

கொழும்பு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை இரண்டு சிறப்பு விமானங்கள் பயணிகளை ஏற்றுக்கொண்டு திருவனந்தபுரத்திற்கும், மற்றொரு சிறப்பு விமானம் பயணிகளை ஏற்றுக்கொண்டு, மும்பைக்கும் புறப்பட்டு சென்றன. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாங்கள் 150 பேருக்கு மேல் இருந்தும், தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு விமானம் கூட இயக்கப்படாதது ஏன் என்று தெரியவில்லை.

அதோடு இப்போது நாங்கள் எங்கள் கையில் வைத்திருக்கும் லக்கேஜ் உடன் சென்னைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். ஆனால் எங்களுடைய செக்கிங் லக்கேஜ் எல்லாம் இன்னும் வரவில்லை. அது எப்போது வரும் என்று தெரியவில்லை. லங்கன் ஏர்லைன்ஸ் அந்த லக்கேஜ்களை முறைப்படி எங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று நம்புகிறோம். லங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் நடந்து கொண்ட முறை எங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.