Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் 6 பேர் ஐநா தூதர்களாக நியமனம்

சேலம்: சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்ற தமிழக மாணவர்கள் 6 பேர், ஐநா அமைப்பின் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில், சர்வதேச இளைஞர் மாநாடு 5.0, கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. அங்குள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டு மையத்தில் நடந்த மாநாட்டில், இந்தியா, சீனா, தாய்லாந்து, மலேசியா உள்பட 62 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 6 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதன்படி, சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆஷ்வாக், வேலூர் மாவட்டம் லத்தேரி அரசு பெண்கள் பள்ளி மாணவி நிஷாந்தினி, நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் மாதிரி பள்ளி மாணவி யாழினி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் கமலேஷ், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி தரணி, செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் ஆகியோருடன், விழுப்புரம் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜோஸ்பின் தனமேரி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் பேசினர்.

தமிழகத்தை சேர்ந்த கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள், முதன்முறையாக, ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில் நின்று, தமிழ்நாட்டின் கல்வி முறையில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை எவ்வாறு உட்பொதிக்கிறது என்பது குறித்த விளக்கக்காட்சியை வழங்கினர். இது உலகளாவிய தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களிடமிருந்து சிறப்பான அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.

குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஆதரவுடன் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையான வளர்ச்சி கவுன்சிலின் தூதர்களாக, தமிழ்நாடு அரசுப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இயக்குநர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் அவர்களுக்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.