Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னோடி டிஜிட்டல் தளமான தமிழ்நாடு திறன் பதிவேடு தளம்: துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்ட முன்னோடி டிஜிட்டல் தளமான “தமிழ்நாடு திறன் பதிவேடு’ என்ற தளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு திறன் பதிவேட்டுத் தளம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளைப் பயன்படுத்தி குரல் தேர்வு மூலம் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மற்றும் Chatbot உதவியுடன் தொழில் நிறுவனங்கள் எளிதாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களின் விவரங்களை பெற்று, அவர்களின் திறனுக்கேற்ற வேலைவாய்ப்பை வழங்க இயலும்.

பொறியியல், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, மற்றும் தொழிற்பயிற்சி போன்ற பிரிவுகளில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயின்று இதுவரை திறன் சான்றிதழ்கள் பெற்ற 13.7 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் விவரங்கள் இத்தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் தகுதி வாய்ந்த இளைஞர்களை தேர்வு செய்வதுடன், அவர்களுக்கு நேர்காணல் தொடர்பான மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மற்றும் வாட்ஸ்அப் மூலம் நேர்முக தேர்விற்கான தகவல்களை அனுப்பவும், தொடர் கண்காணிப்பு மற்றும் பணி நியமனம் பெற்ற விவரங்களை தெரிவிக்கவும் பயன்படும்.

இதை தொடங்கி வைத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகளை வழங்குவதுடன் உலகலாவிய மற்றும் முன்னணி நிறுவனங்களில் அவர்களின் திறமைக்கேற்ற பணி வாய்ப்புகளை பெற்று தந்து அவர்களின் நீடித்த வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பங்களிக்கும். இந்த முயற்சி இந்தியாவின் திறன் தலைநகராக தமிழ்நாடு உள்ளது என்ற நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன் தமிழ்நாட்டின் டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய ஏதுவாக அமைகிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகளவில் போட்டித் தன்மை வாய்ந்தவர்களாகவும் தொழில்துறைக்கு தயாராகவும் இருப்பதை இதுபோன்ற நடவடிக்கைகள் உறுதி செய்கிறது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி, நான் முதல்வன் திட்ட முதன்மை செயல் அலுவலர் ஜெயப்பிரகாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.