தமிழ்நாடு ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க பரிந்துரை: தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்
சென்னை: தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜாவும், சென்னையைச் சார்ந்த சமூக ஆர்வலர் சிட்லபாக்கம் தயானந்த் கிருஷ்ணனும் கடந்த ஜூன் 17ம் தேதி தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை நேரில் சந்தித்து, தமிழ்நாடு ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க வேண்டும்் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். இது சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 3ம் தேதி தமிழ்நாடு போக்குவரத்து துறை துணைச் செயலாளர் கிரேசி ஜோசப் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை இணைத்து தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களில் மிகப்பெரிய மாற்றம் வரும் மற்றும் ரயில்வே அடிப்படை கட்டமைப்புகளை விரைந்து மேம்படுத்தும் பட்சத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க முடியும்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கூறியதாவது: தமிழ்நாடு ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் அமைக்க தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி. தமிழ்நாடு ரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் விரைவில் அமைக்கப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே திட்டங்கள், அடிப்படை கட்டமைப்பு பணிகள் விரைவு பெறும். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க நல்வாய்ப்பாக அமையும். அதேபோல கூடுதல் பெட்டிகள் நிறுத்த இடமில்லாமல் தவிக்கும் திருச்செந்தூரில் 24 பெட்டிகள் கொண்ட ஐந்து நடை மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில் திருச்செந்தூரின் மக்கள் வசதிக்காக கூடுதல் ரயில்கள் அதிகபட்ச பெட்டிகளுடன் இயக்க முடியும். மேலும் தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்கப்படும் பட்சத்தில் நெல்லையிலிருந்து பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


