சென்னை: சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.2,442 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை கோயம்பேடு-பட்டாபிராம் இடையே 21.7 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் உட்பட பல்வேறு பணிகளுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒன்றிய அரசு ஒப்புதலை அடுத்து தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரயில் தடத்துடன், புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், கோயம்பேடு – ஆவடி – பட்டாபிராம் வழித்தடத்தில் பயணிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. கோயம்பேட்டில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், கோயம்பேடு, பாடி புதுநகர், பார்க் சாலை, கோல்டன் பிளாட் சந்திப்பு, வாவின் முதல் பிரதான சாலை, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ், டன்லப், அம்பத்தூர், அம்பத்தூர் ஓ.டி., ஸ்டெட்போர்டு மருத்துவமனை, திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக், ஆவடி ரயில் நிலையம், கஸ்தூரிபா நகர், இந்து கல்லுாரி, பட்டாபிராம், வெளிவட்ட சாலை ஆகிய 19 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. மேலும், ஆவடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்குச் செல்லும் வகையில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.