தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட பாஜ அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கும்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அறிக்கை
சென்னை: கச்சத்தீவை மீட்கவும், இழந்த தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும் பாஜ அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரத்தில் தமிழக அரசு சார்பில் நடந்த விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் எழுப்பியுள்ளார். மத்திய அரசு மீது பல புகார்களையும் கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு நான் பலமுறை பதிலளித்து விட்டேன். நான் உள்பட பாஜ தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை அவரிடம் இருந்து பதில் இல்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்கள் யார்?. மத்தியில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளதுடன், இலங்கை அரசு கைது செய்த மீனவர்கள் உடனடியாக தமிழகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளனர்.
இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை, மரணத்தின் பிடியிலிருந்து மீட்டு வந்த பெருமை பிரதமர் மோடியை சாரும். கச்சத்தீவை மீட்கவும், இழந்த தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும் பாஜ அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கும். இதுபோலவே, கரூர் அப்பாவி மக்கள் பலியான விவகாரத்திலும் பாஜவை கேள்வி கேட்க, முதல்வருக்கு தார்மீக உரிமை இல்லை. மணிப்பூர் பிரச்னையைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.