Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒத்திவைக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக, கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த 27ம் தேதி அறிவித்தார். இதற்கான பணிகள் வருகிற நவம்பர் 4ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வரைவு பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் சீர்திருத்தும் பணி நவம்பர் 4ம் தேதி முதல் தொடங்குகிறது. முன்னதாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) தலைமையில் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் வருகிற 4ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தும் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 70 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள், 3 முறை வீடுகளுக்கு வந்து சிறப்பு தீவிர திருத்தும் பணிகளில் ஈடுபடுவார்கள்.

இந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்பதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சி நிர்வாகிகள் அழைப்பு அனுப்பப்பட்டது. அதன்படி ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ (திமுக), டி.ஜெயக்குமார், இன்பதுரை (அதிமுக), கே.வி.தங்கபாலு, டி.செல்வம் (காங்கிரஸ்), கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் (பாஜக), பாலாஜி, குணவழகன் (விசிக), ஆறுமுகநயினார், சாமுவேல்ராஜ் (மார்க்சிஸ்ட்), வகிதா நிசாம், பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), கிருஷ்ணன், செந்தில்குமார் (நாம் தமிழர் கட்சி), பார்த்தசாரதி, ஜனார்த்தனன் (தேமுதிக), ஸ்டெல்லா, முகமதுபரூக் (ஆம்ஆத்மி), கார்த்திக், சீனிவாசன் (தேசிய மக்கள் கட்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தங்கள் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணிகள் குறித்த சந்தேகங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டனர். அனைத்துக்கட்சி நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பிறகு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்கூட்டியே கருத்து கேட்டிருக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரியுள்ளோம். பீகாரை போன்று தமிழகத்தில் வாக்காளர் பெயர்களை நீக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எந்த கட்சியும் முழுமனதோடு ஏற்கவில்லை. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஏற்க மாட்டார்கள். உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் விடுபடக்கூடும். முகவரி இல்லாமல் இருப்பவர்களும் வாக்காளர் பட்டியலில் இருக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக சார்பில் பங்கேற்ற ஜெயக்குமார் கூறும்போது, ‘‘தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடி தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். எஸ்ஐஆர்-ஐ நீட்டிக்க பிரிசீலனை செய்ய வேண்டும். நவம்பர் 2ம் தேதி திமுக கூட்டணி நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்பதா, இல்லையா என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்’’ என்றார். இதேபோன்று, திமுக கூட்டணி சார்பில் பங்கேற்க காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகளும், ‘‘தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும்’’ என்று கூறினர்.

* வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்கூட்டியே கருத்து கேட்டிருக்க வேண்டும்.

* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும்

* பீகாரை போன்று தமிழகத்தில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்படும் என்ற அச்சம் உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எந்த கட்சியும் முழுமனதோடு ஏற்கவில்லை.

* புதுச்சேரியில் எதிர்ப்பு: திமுக- காங். வெளிநடப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்துக்கட்சிகளுடன் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் தலைமையில்ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எதிர்க்கட்சி தலைவர் (திமுக) சிவா, செந்தில்குமார் எம்எல்ஏ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ், பாஜ, அதிமுக உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதேபோல் புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி இஷிதா ராட்டி தலைமையில் முதலியார்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் வாக்காளர் திருத்தப் பணியை மேற்கொள்வது என்பது வாக்காளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை திமுக மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர கதியில் அதுவும் 23 ஆண்டுகாலம் செய்யாமல் இருந்த இந்த திருத்தப் பணியை இவ்வளவு குறுகிய காலத்தில் செய்ய காரணம் என்ன? இதற்கு என்று கால அவகாசம் அளித்து வாக்காளர் திருத்தப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக காங்கிரஸ் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிருத்திருப்பதை புதுச்சேரியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் செயல்படுத்துவார்கள் என்றும், அதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் தேர்தல் அதிகாரி இஷிதா ராட்டி தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த திமுக மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகள் கூட்டத்தை உடனே புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.