Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழகத்தில் இன்று பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் துவங்கியது!

சென்னை: தமிழகத்தில் இன்று பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகள் துவங்கி நடந்து வருகின்றன. 645 இடத்துக்கு நடத்தப்படும் தேர்வை 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 15ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு எழுத 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 பேர், பெண்கள் 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் அடங்குவர்.

இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 1905 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒரு தேர்வு கூடத்துக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் (20 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பொறுத்தவரை பள்ளிகள், கல்லூரிகள் என 188 தேர்வு கூடங்களில் இந்த தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 53606 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. எழுத்து தேர்வில் பொது அறிவியலில் 75 வினாக்களும், திறனறிவு தேர்வில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும்.

வினாக்கள் அனைத்தும் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு நடைபெறும் நேரத்தில் இருந்து 1 மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு கூடங்களுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் தவிர வேறு யாரும் தேர்வு கூடங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோகிராப் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.