சென்னை: வட தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் திடீர் மழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பைவிட 2-5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக நாகப்பட்டினத்தில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்பட்டது. மேலும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும், கடலூர், ஈரோடு, மதுரை, சேலம், ராமநாதபுரம், வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று மாலையில் இடி மின்னலுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இதற்கிடையே, மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று அதே பகுதியில் நிலை கொண்டு இருந்தாலும், வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து மியான்மர்- வங்கதேச கடலோரப்பகுதிக்கு நகரத் தெ ாடங்கியுள்ளது. மேலும், வட கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று வலுவிழந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 5ம் தேதியில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதை நிலை 9ம் தேதி வரை நீடிக்கும். வெப்பநிலையை பொருத்தவரையில் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
 
 
 
   