Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டிற்கே உரித்தான தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழ்நாட்டிற்கே உரித்தான தூயமல்லி அரிசி மற்றும் கவுந்தபாடி நாட்டு சர்க்கரைக்கு வேளாண் விளைபொருட்களுக்கு தனித்துவ புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 9 வேளாண் பொருட்களுக்கு பெறப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்திலிருந்து உருவாகும் ஒரு பொருளில் பயன்படுத்தப்படும் ஒரு அடையாளமாகும். அப்பொருட்கள் அவற்றின் உருவாகும் இடத்தின் சிறப்பு குணங்களைக் கொண்டதாக இருக்கும்.

உலகின்‌ வெவ்வேறு பகுதிகளில்‌ பல்வேறு வேளாண் பொருட்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டாலும்‌, குறிப்பிட்ட இடத்தில்‌, பகுதியில்‌ உற்பத்தி செய்யப்படும்‌, பொருட்கள்‌ அவை உருவாகும் இடத்தின் காரணமாக அவற்றின் சுவை, தரம்‌ போன்ற சிறப்பு குணங்களைக் கொண்டு இயற்கையில்‌ தனித்துவமானதாக விளங்குகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் தனித்துவம் கொண்ட வேளாண் பொருட்களை கண்டறிந்து அவற்றிற்கு புவிசார் குறியீடு பெறும் பொருட்டு, 2021-22ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டு, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் புவிசார் குறியீடு பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், சேலம் கண்ணாடி கத்திரி, தூயமல்லி அரிசி, கவுந்தபாடி நாட்டு சர்க்கரை, அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, வீரமாங்குடி அச்சுவெல்லம், விளாத்திகுளம் மிளகாய், கோட்டிமுளை கத்தரி, மதுரை செங்கரும்பு, கருப்பு கவுனி அரிசி, ஆண்டார்குளம் கத்தரி, விருதுநகர் அதலைக்காய், திண்டிவனம் பனிப்பயறு, சேங்கல் துவரை, ஜவ்வாதுமலை சாமை, சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லி மலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, அய்யம்பாளையம் நெட்டை தென்னை, செஞ்சோளம், புவனகிரி மிதி பாகற்காய், உரிகம்புளி, திருநெல்வேலி அவுரி இலை, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் (கண்வலி) விதை, நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை மற்றும் பொள்ளாச்சி ஜாதிக்காய் ஆகிய 41 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது.

இதுவரை, சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், தூயமல்லி மற்றும் கவுந்தம்பாடி நாட்டு சர்க்கரை ஆகிய 9 வேளாண் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு இவ்வரசால் பெறப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பெறப்பட்ட வேளாண் பொருட்களை‌ சந்தைப்படுத்துதல்‌ எளிதாக்கப்படுவதுடன்‌ அவற்றின்‌ தேவை மற்றும்‌ ஏற்றுமதி அளவும் அதிகரித்து, வேளாண் வணிகம் விரிவுபடுத்தப்படுவதுடன், பொருளாதார வளர்ச்சி மேம்படும்.