சென்னை: தமிழகத்தில் 2 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் வரைபடமாக தயாரிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. தமிழக அரசு இந்து கோயில்களுக்கு சொந்தமான நிலத்தை வரைபடமாக தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 3,438 கிராமங்களில் 1.86 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோயில் நிலங்கள் நவீன தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் வரைபடமாக தயாரிக்கப்பட்டு உள்ளன. 20ம் தேதிக்குள் 2 லட்சம் ஏக்கர் கோயில் நிலங்கள் வரைபடமாக தயாரிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: ஆக்கிரமிப்பாளர் களிடம் இருந்து கோயில் நிலத்தை மீட்டு வருகிறோம். பின்னர் கோயில் நிலங்களை சுற்றி வேலி அமைத்து அதை வாடகைக்கு விடுவதன் மூலம் வருவாய் ஈட்டுகிறோம். மேலும் பல சந்தர்ப்பங்களில், பசுமையை மேம்படுத்துவதற்காக பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியை பயன்படுத்தி காலியாக உள்ள நிலங்களில் மரங்களை நடுகிறோம். இதுவும் கோவில்களுக்கு நிலையான வருமானத்தை தருகிறது.
2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரை 3,438 கிராமங்களில் உள்ள 91,447 சர்வே எண்கள் மற்றும் துணைப்பிரிவு எண்களில் 1.86 லட்சம் ஏக்கர் நிலம் அளவிடப்பட்டு, 1.21 லட்சம் சர்வே கற்கள் நடப்பட்டுள்ளன. வரைபட பணியை மேற்கொள்வதற்காக 38 தாசில்தார்களையும், சர்வேயர்களையும் இந்து சமய அற நிலையத்துறை நியமித்துள்ளது. மேலும் மற்றொரு முக்கிய முயற்சியாக, கோயிலுக்குள் நடக்கும் நிகழ்ச்சி களுக்கு நன்கொடை யாளர்கள் பணம் செலவிடும் போது அதன் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து வருகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில், இந்து சமய அறநிலையத்துறை ரூ.1,300 கோடி நன் கொடைகளை பெற்றுள்ளது. அவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்த நிதியானது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறைகள் கட்டுதல், கோவில்களுக்கு தேர்களை வாங்குதல் மற்றும் புதுப்பித்தல், கும்பாபிஷேக விழாக்களை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 3,655 கோவில்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன.
கோயில் நிலங்களை நீண்டகாலம் ஆக்கிரமித்து வைத்து இருந்தவர்களிடம் இருந்து மீட்டு அதை முறைப்படுத்தி தகுதியானவர்களுக்கு குத்தகை உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரை 5.41 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வைத்து இருந்த 222 பேர் குத்தகைதாரர்களாக முறைப்படுத்தப்படடுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.