Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீட் தேர்வில் 720க்கு 720 பெற்று முதலிடம் தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனை

திருவண்ணாமலை: நீட் நுழைவுத்தேர்வில், திருவண்ணாமலை மாணவி, ராமநாதபுரம் மாணவன் ஆகியோர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்து உள்ளனர். இளநிலை மருத்துவ பட்டப்படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5ம் தேதி நடந்தது. இத்தேர்வை 23.33 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் ஜூன் இரண்டாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்கூட்டியே நேற்று முன்தினம் வெளியானது.

நீட் தேர்வு முடிவுகளில், 13.16 லட்சம் மாணவ, மாணவிகள் மருத்துவ கல்வியில் சேர தகுதி பெற்றுள்ளனர். மேலும், நாடு முழுவதும் 67 மாணவ, மாணவிகள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி, திருவண்ணாமலையை சேர்ந்த மாணவி ஜெயதி பூர்வஜா, 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். நீட் நுழைவுத்தேர்வில் தனது முதல் முயற்சியிலேயே 100 சதவீத மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்திருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து, மாணவி ஜெயதி பூர்வஜா கூறியதாவது: சிறுவயதில் இருந்தே டாக்டராக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. எனவே, அதை இலக்காக வைத்து தொடர்ந்து படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 494 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்றேன். நீட் நுழைவுத்தேர்வுக்காக வேறு எந்த சிறப்பு பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளவில்லை. பள்ளியில் நடத்திய சிறப்பு பயிற்சியில் மட்டுமே கலந்து கொண்டேன். பிஎன்சிஆர்டி பாடத்திட்டங்களை முழுமையாக படித்தாலே நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். தேசிய அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. எதிர்காலத்தில், சிறந்த மருத்துவராக வரவேண்டும் என்பது என்னுடைய லட்சியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் ராமநாதபுரம் கோட்டைமேடு தெருவைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீராம் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீராம் கூறும்போது, ‘‘நீட் தேர்வில் சாதனை படைப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. நீட் தேர்வில் 700க்கு மேல் பெற வேண்டும் என எனது தாய் ஊக்கம் அளித்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீட் தேர்வு விடை குறிப்பு வெளியிட்டதும் எனது பள்ளி ஆசிரியர்கள் 720 பெறுவேன் என உறுதியளித்தனர். தற்போது தேர்வில் முழு மதிப்பெண்களை பெற்றதும் மகிழ்ச்சி அடைந்தேன். எப்போதும் குழுவாக சேர்ந்து படிப்போம். மாணவர்கள் நாம் அடைய வேண்டியதை நினைத்து விரும்பி படித்தால் எதிலும் சாதிக்கலாம். யாருடைய வற்புறுத்தலுக்காகவும் படிக்காமல், பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். மருத்துவம் படித்த பின் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்பதே ஆசை’’ என்றார்.