Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட திறன் பயிற்சிகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 6,41,664 பேர் பணி நியமனம்: 2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவி பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2538 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 2538 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு பிறகு அதுவும் திமுக ஆட்சியில்தான் இரட்டை இலக்கு வளர்ச்சியை இன்றைக்கு தமிழ்நாடு எட்டி இருக்கிறது. ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி 2024-25ல் தமிழ்நாடு 11.19 விழுக்காடு பெற்றிருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது நாம் கணித்ததைவிட இது கிட்டத்தட்ட 2.2 விழுக்காடு அதிகம். இதற்கு முன்பு 2010-11ம் ஆண்டு நிதியாண்டில் கலைஞர் ஆட்சியில்தான் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 13.12 விழுக்காடாக இருந்தது. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் இரட்டை இலக்கை பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியிருக்கிறது. இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது. இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெறாத வளர்ச்சி.

இது சாதாரணமாக நடந்துவிடவில்லை. பல்வேறு நெருக்கடிகள், அவதூறுகளுக்கு இடையிலேயே தான் இந்த வெற்றியை நாம் அடைந்திருக்கிறோம். அந்த வகையில் இது மிகவும் சிறப்பாக வெற்றி. இது தனிப்பட்ட ஸ்டாலினுடைய வெற்றி அல்ல. அமைச்சரவையில் இருக்கும் ஒவ்வொரு அமைச்சர், அனைத்து துறை அதிகாரிகள், கடைநிலை அரசு ஊழியர்கள் என்று ஒவ்வொரு திட்டத்தையும் முறையாக செயல்படுத்திய ஒவ்வொரு துறைக்கும் கிடைத்திருக்கக்கூடிய கூட்டு வெற்றி இது. என்னை நம்பி ஆட்சி பொறுப்பை ஒப்படைத்திருக்கிற தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த நேரத்தில், இந்த வெற்றி செய்தியை காணிக்கையாக்குகிறேன்.

எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கோடு பயணிக்கும் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான வெற்றி பயணத்துக்கு கிடைத்த நற்சான்று பத்திரம்தான் இது. இப்போது அடைந்திருக்கும் இலக்கோடு நான் திருப்தி அடைய மாட்டேன். இன்னும் அதிகமான உயரத்தை நாம் அடைய வேண்டும். அதை நோக்கி பயணத்தை திராவிட மாடல் 2.0-வில் தொடருவோம். அந்த பயணத்துக்கு நீங்கள் எல்லோரும்தான் துணையாக இருக்கப்போறீங்க. இந்த மகிழ்ச்சியான செய்தியோடு, இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 2538 பேர் பணி நியமன ஆணைகளை பெற்றிருக்கிறார்கள்.

இளைஞர்கள் தான் இந்த நாட்டின், தமிழ் சமுதாயத்தின் அடித்தளம். இளைஞர்களை முன்னேற்றுவதும், முன்னேற வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதும்தான் நமது திராவிட மாடல் அரசின் முதன்மையான பணி. திராவிட மாடல் அரசு இளைஞர்களுக்கான அரசு. அதனால்தான் நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவர்களையும், இளைஞர்களையும் கல்வி அறிவு பெற்றவர்களாக, திறன் மிக்கவர்களாக உயர்த்திக் கொண்டு இருக்கிறோம்.

கல்வியும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் கொடுத்தால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு உழைத்துக் கொண்டு இருக்கிறோம். இதனால் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் பற்றி புள்ளி விவரமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த 4 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, எம்ஆர்பி, டிஎன்யுஎஸ்ஆர்பி உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவும், நகராட்சி, கூட்டுறவு, வருவாய் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 1,08,111 பேருக்கு பணி நியமனம் வழங்கி இருக்கிறோம்.

திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 3,28,393 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம். தொழிலாளர் மற்றும் வேவைாய்ப்பு துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 2,65,223 பேருக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம். முதன்முறையாக விளையாட்டு துறையில் தேசிய மற்றும் உலக அளவில் சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு அதன்மூலம் 84 பேருக்கு இந்த ஆண்டு ேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 89 இளைஞர்கள் பல்வேறு முக்கிய ஒன்றிய அரசு பணிகளில் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த திட்டத்தில் படித்த 18 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 6,41,664 பேர் கடந்த 4 ஆண்டுகளில் பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள். இதெல்லாம் நம்முடைய தொடர் முயற்சிகளுக்கு, மாணவர்களுக்கு வழங்கிய திறன் பயிற்சிகளுக்கான பலன் இது.

இந்த வெற்றி பயணம் தொடரவும், தமிழ்நாட்டின் இளைஞர்கள் நலன் சிறக்கவும் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பாடுபடும். அமைதியான சூழல், சிறப்பான சட்டம்-ஒழுங்கு, திறமையான இளைஞர்கள், தொழில் வளர்ச்சிக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், நம்முடைய உழைப்பு மற்றும் தொலைநோக்கு பார்வைகளோடு நாம் முன்னெடுக்கும் திட்டங்களால் தமிழ்நாடு இன்றைக்கு தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், மேலாண்மை இயக்குநர்கள் வினய், சமீரன், மதுசூதன் ரெட்டி, பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப் குமார், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் கிடைக்கும்

பல்வேறு இந்திய நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதலீடுகளுக்கான Destination. கடந்த 4 ஆண்டுகளில், உற்பத்தி துறை, ஐடி துறை, கட்டுமானத்துறை என்று பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் மேற்கொண்ட 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.10 லட்சத்து 63 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திருக்கிறார்கள். இதனால் 2,30,856 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அடுத்து, கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் தரப்போகிறோம். பொதுவாக, நான் மாணவர்களிடம் பேசும்போது, ‘கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து’ என்று சொல்லி அவர்களை மோட்டிவேட் செய்வேன். அப்படிப்பட்ட கல்வி செல்வத்தை பெற்று, முன்னேற்றத்திற்கான முதல் படியில் காலடி வைக்கும் இளைஞர்களான உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, நாள்தோறும் உலகம் அப்டேட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதற்கு இணையாக நீங்களும் அப்டேட் ஆக வேண்டும். தேக்கம் என்பதே உங்களின் வாழ்க்கையில் இருக்க கூடாது.

அதற்கு ஏற்றது போல வளர்ச்சி செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம். இந்த நிகழ்வை பார்த்துகொண்டிருக்கக்கூடிய இளைஞர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, அடுத்து அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும், இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் வர போகிறது. அதற்கான அனைத்து வேலைகளையும் நாங்கள் இப்போதே தொடங்கிவிட்டோம். அந்த வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.