தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 3வது நாளாக ஸ்டிரைக் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுடன் ஆயில் நிறுவன அதிகாரிகள் பேச்சு தோல்வி
நாமக்கல்: நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய 3 ஆயில் நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் அறிவித்த டெண்டரில் பங்கேற்ற 3,500 லாரிகளில், 700 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. புதிய டெண்டரில் பங்கேற்றுள்ள அனைத்து வாகனங்களுக்கும், பணி ஆணை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இந்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், கொச்சி, மங்களூரு, பாலக்காடு, தூத்துக்குடி, சென்னை, அனந்தபூர், விசாகப்பட்டினம், கொண்டப்பள்ளி ஆகிய ஊர்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் காஸ் லோடு ஏற்றுவது, கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள துறைமுகங்களில் இருந்து, கப்பல்களில் உள்ள சமையல் காஸ் ஏற்றப்படாமல் தேங்கியுள்ளது. தூத்துக்குடி, மங்களூரு ஆகிய துறைமுகங்களில் 2 கப்பல்களில் கொண்டு வரப்பட்டுள்ள சமையல் காஸ் இறக்கப்படாமல் உள்ளது. சுமார் 3 ஆயிரம் டன் சமையல் காஸ், கப்பல்களில் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் ஆயில் நிறுவனங்கள் தினமும் ரூ.60 லட்சம் துறைமுகத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, 3 ஆயில் நிறுவனங்களின் செயல் இயக்குனர்கள் நேற்று காணொலி காட்சி மூலம், தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இன்று (12ம் தேதி) தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுகுறித்து, தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் கூறுகையில், ‘தற்போது சுமார் 4,100 வாகனங்கள், 3 ஆயில் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெற்று இயக்கப்பட்டு வருகிறது. இதே நிலை நீடிக்கவேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. அதற்கு அவர்கள் இன்று (12ம்தேதி) முடிவு சொல்வதாக கூறியுள்ளனர். ,’ என்றார்.