சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தவெக முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த ஆர்ப்பாட்டங்கள் இன்று அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலங்கள் முன்பு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடைபெற உள்ளது, சென்னையை பொருத்தவரை ஆட்சியர் அலுவலகம் அருகே அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், சிவானந்தா சாலை ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினார்கள்.
அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுத்தனர். ஆனால் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். இதையடுத்து சென்னை சிவானந்தா சாலையில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர்களுக்கு இ-மெயில் மூலம் உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கியுள்ளது. குறிப்பாக, போலீசார் அனுமதி அளிக்கும் இடத்தில் மட்டும் தான் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும்,
எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்ட விவரங்களை உடனுக்குடன் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் நடிகர் விஜய் ஏதாவது ஒரு மாவட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில அவர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.


