Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்க மேலும் 3 நாள் அவகாசம் நீட்டிப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு; வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ல் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க மேலும் 3 நாள், அதாவது டிசம்பர் 14ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், கேரளா, மேற்குவங்கம், சட்டீஸ்கர், கோவா, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் என 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 11ம் தேதியுடன் (நேற்று) முடியும் என்று கூறப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் எஸ்ஐஆர் என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்த பணிகளில் தமிழகம் முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் நாளில் இருந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால், தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) பணி​களில் பல்​வேறு நடைமுறை சிக்​கல்​கள் உள்ளது எனக்கூறி திமுக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க டிசம்பர் 4ம் தேதி என்பதை டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் உத்தவிட்டிருந்தது. மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ம் தேதியும், வாக்காளர் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 14ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்க மேலும் 3 நாட்கள், அதாவது டிசம்பர் 14ம் தேதி (ஞாயிறு) வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ம் தேதிக்கு பதில், டிசம்பர் 19ம் தேதி (வெள்ளி) அன்று வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகாரில் தேர்தல் நேரத்தில் எஸ்ஐஆர் திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் மீண்டும் 30 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். இது குறித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் நாடு முழுவதும் எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இதனால் தற்போது தேர்தல் நடைபெறும் தமிழகம், மேற்குவங்கம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களிலும் எஸ்ஐஆர் பணிகளை குறுகிய காலத்தில் முடிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தமிழகத்திலும் 70 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் நீக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சிலரது பெயர்கள் படிவம் கொடுக்கப்பட்ட பிறகும், இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் சார்பில் எஸ்ஐஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில்தான் தேர்தல் ஆணையம் மேலும் 3 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* தமிழ்நாட்டில் 100% எஸ்ஐஆர் பதிவேற்றம்

தமிழ்நாட்டில் 100 சதவீதம் எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் வெறும் 815 பேருக்கு மட்டுமே எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்படவில்லை. 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு எஸ்ஐஆர் படிவங்கள் கொடுக்கப்பட்டன. இன்னும் 551 எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன.

* புதுச்சேரி, மே.வங்கத்தில் பணி முடிந்தது

மொத்தம் 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து வரும் நிலையில், தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டை போல குஜராத்தில் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 19ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மபி, சட்டீஸ்கர், அந்தமான் நிக்கோபரில் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி வரும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

உபியில் விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி வரும் 26 வரை நீட்டிக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 31ம் தேதி வெளியிடப்படும். இதுதவிர, கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் மாற்றமின்றி விண்ணப்பங்களை பெறுவதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்தது. வரும் 16ல் அங்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் ஏற்கனவே விண்ணப்பங்களை திரும்ப பெறும் தேதி வரும் 18 ஆகவும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி வரும் 23 ஆகவும் நீட்டிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

* வழங்கிய விண்ணப்பத்தை விட கணினியில் பதிவானது அதிகம்

எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் கணினியில் பதிவு செய்துள்ளது. இதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில மாநிலங்களில் வழங்கிய விண்ணபங்களை விட கணினியில் பதிவான விண்ணப்பங்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தமானில் 3,10,402 விண்ணப்பம் வழங்கப்பட்ட நிலையில், கணினியில் பதிவு செய்தவை 3,10,404 (2 கூடுதல்) என கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் 99.64 சதவீத படிவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருக்கும் நிலையில், வழங்கிய விண்ணப்பங்கள் எண்ணிக்கை 5,46,86,316 ஆக இருக்கையில், பதிவு செய்தவை 5,46,86,708 ஆக (392 அதிகம்) உள்ளது. மபியில் வழங்கியது 5,74,05,994 ஆகவும் பதிவு செய்யப்பட்டது 5,74,06,140 (146 அதிகம்) ஆகவும் உள்ளது. சட்டீஸ்கரில் வழங்கியது 2,12,30,614 ஆகவும், பதிவு செய்தது 2,12,30,740 (126 அதிகம்) ஆகவும் உள்ளது. புதுச்சேரியில் 10,21,573 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, 10,21,577 (4 அதிகம்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.