தமிழ்நாட்டில் அவசர கதியில் எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்தது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: பதிலளிக்க இரண்டு வாரம் கெடு
புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகளால் பல லட்சம் மக்கள் வாக்குரிமையை இழந்துள்ளனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களுக்கு வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆ.எஸ்.பாரதி தரப்பில் கடந்த 3ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக தரப்பில் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மேற்குவங்கம் காங்கிரஸ் கமிட்டி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தரப்பிலும் இது போன்ற மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி இருந்தனர். மேற்கு வங்கம், புதுவை, கேரளா, பீகார் ஆகிய மாநிலங்களின் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், ராகேஷ் திவேதி ஆகியோர்கள் ஆஜராகினர். இதைத்தொடர்ந்து திமுக தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தில், ‘‘தமிழ்நாட்டில் அவசர கதியில் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் அறிவித்து பணியை தொடங்கி உள்ளது. அதாவது ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் கிராமப்புற சமூகம் என்பது அதிகப்படியாக உள்ளது. மேலும் அடுத்து வரும் மூன்று மாதங்களில் மாநிலத்தின் வானிலை என்பது முற்றிலும் வேறுபட்டு இருக்கும். மேலும் மழைக்காலம் என்பதால் வெள்ளப் பாதிப்புகள் அதிக இடங்களில் காணப்படும். அதேப்போன்று கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும் காலங்களாகும். மேலும் தை மாதம் என்பது விவசாயிகளின் அறுவடைகாலம் ஆகும். இத்தனை சிக்கல் இருக்கும் போது ஒரு மாதத்தில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் பட்டியல் நடவடிக்கையை எப்படி மேற்கொள்ள முடியும்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அமைப்பே தவறானதாகும். இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த மேற்கொள்ளும் போது பல லட்சக்கணக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால் பல இடங்களில் இணைய சேவைகள் இல்லாமலும், மலை கிராமங்களாகவும் இருக்கிறது. எனவே இது எவ்வாறு சாத்தியமாகும். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை என்பது தமிழ்நாட்டில் வாக்காளர்களிடையே பாதிப்பை பெரிய அளவில் ஏற்படுத்தும்.
குறிப்பாக இதுபோன்ற அவசர கதியில் நடவடிக்கை எடுப்பதால் ஒவ்வொரு வாக்காளரின் ஜனநாயக உரிமை திட்டமிட்டு பறிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் உட்பட அரசு சார்ந்த அதிகாரிகள் அனைவரும் பருவமழை பாதிப்பின் கண்கானிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை என்பது சட்டப்பூர்வமானது தானா என்ற கோணத்தில் விசாரணையை நடத்த வேண்டும்’’ என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் நகல் எங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. அதேப்போன்று வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பட்டியல் தொடர்பாக உயர்நீதிமன்றங்களில் இருக்கும் வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பீகார் மாநிலத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘பீகாரில் விண்ணப்பித்த பலருக்கு அத்தாட்சி சிலிப் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களால் மேல்முறையீடு செய்ய முடியவில்லை.
போலிகளை கண்டறியும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஆனால் அதனை பயன்படுத்தி போலி வாக்காளர்களை கண்டறிய மறுக்கிறார்கள். முழு வெளிப்படை தன்மை இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியல் மீது முழு நம்பிக்கை ஏற்படும். வாக்காளர் பட்டியலை ஸ்கேன் செய்யும் அளவுக்கான வடிவத்தில் வெளியிட்டால் மட்டுமே இதற்கு தீர்வுக்கான முடியும். எனவே இதன் மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,‘‘தமிழ்நாட்டில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பட்டியல் தொடர்பான நடவடிக்கையை அவசர கதியில் தொடங்கியது ஏன்?. இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் பணிகளில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதுதொடர்ந்து நடைபெறலாம். ஆனால் அதில் இருக்கும் சாதக பாதகங்கள் குறித்த விவரங்களை அடுத்த இரண்டு வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது. கண்டிப்பாக இந்த விவகாரத்தில் சட்ட பிரச்னை குறித்து விசாரணை நடத்தப்படும்.
மேலும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது எந்த நடைமுறை சிறந்ததாக இருக்கின்றதோ அதனை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு விவகாரங்கள் இருந்தாலும், அவை அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும். அதனை அவர்கள் செய்வார்கள்’’ என்று நம்புகிறோம். குறிப்பாக இந்த வழக்கில் நாங்கள் புரிந்து கொண்டது என்னவென்றால்,‘‘ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனி பிரச்னைகள் உள்ளன.
கல்வி, புலம்பெயர் தொழிலாளர்கள், காலநிலை என்று இவை அனைத்தும் அடங்கும். எனவே உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்ததை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். மேற்கு வங்கம், தமிழ்நாடு என ஒவ்வொரு மாநிலத்தின் களத்திலும் வெவ்வேறு நிலை இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அதேப்போன்று பீகாரில் நடத்தப்பட்ட திருத்தத்தில் என்னென்ன சரி செய்ய வேண்டும் என்று இருக்கிறதோ, அதாவது விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அத்தாட்சி சிலிப் வழங்கவில்லை என்பது உட்பட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பட்டியலிட்டு விசாரிக்கப்படும்’’ எனக்கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
* உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க தடை
வாக்காளர்கள் தீவிர சிறப்பு திருத்த பட்டியல் தொடர்பான வழக்குகளில் பிரதான மனுதாரர்களாக இருக்கும் தமிழ்நாடு, புதுவை, கேரளா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் இருக்கும் உயர்நீதிமன்றங்கள் இதுதொடர்பான வழக்கை விசாரிக்க தடை விதிக்கப்படுகிறது. இவைத்தவிர மற்ற மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் இதுதொடர்பான வழக்கை விசாரிக்க கூடாது என்று மனு தாக்கல் செய்து இருந்தால், அதில் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* கோரிக்கை நிராகரிப்பு: அதிமுகவுக்கு குட்டு
உச்ச நீதிமன்றத்தில் நடந்த நேற்றைய விசாரணையின் போது அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘‘நாங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பட்டியலுக்கு ஆதரவளிக்கிறோம். எங்களையும் திமுக வழக்கோடு இணைக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த்,‘‘வாக்காளர் தீவிர சிற்பபு திருத்தப் பட்டியளுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் தனிப்பட்ட முறையில் ரிட் மனுவை தாக்கல் செய்யுங்கள்.
இந்த வழக்கோடு உங்களது மனுவை கண்டிப்பாக இணைத்து விசாரிக்க முடியாது. ஏனெனில் இரண்டிற்கும் வாதங்களில் வித்தியாசப்படும். அது வழக்கு விசாரணையின் போது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் இந்த வழக்கில் உங்களை வாதிட அனுமதிக்க முடியாது’’ என்று தெரிவித்த நீதிபதி, அதிமுகவின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
