* வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை
* நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் கீழ் 1042 மகளிர்க்கு ரூ.49.35 கோடி மானியம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சமூகநீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் இன மக்களின் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி சிறப்பான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
* ஆதி திராவிடர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான திட்டங்கள்: ரூ.108.50 கோடி மதிப்பில் 154 பட்டியல் வகுப்பினர் நலப் பள்ளிகளில் 736 புதிய வகுப்பறைகள், 60 அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ரூ.125 கோடி மதிப்பீட்டில் ஆதி திராவிட நலப் பள்ளிகளில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. ரூ.7.46 கோடி செலவில் 305 பட்டியல் வகுப்பினர் நலப் பள்ளிகளுக்கு தேவையான அறைகலன்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
* அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள்: 39 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு 65 வகுப்பறைகள் மற்றும் 39 ஆய்வுக் கூடங்கள், 34 பள்ளிகளுக்குச் சுற்று சுவர்கள் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. 126 பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
* அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை: வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் ஆதி திராவிட பழங்குடியின இளைஞர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சம் என்பது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 2021-22ல் ரூ.5.31 கோடி என்பது 2025-26ம் ஆண்டில் ரூ.65 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பயனாளிகளின் எண்ணிக்கையும் இதனால் 2021-22ல் 9 என்பது 2025-26ல் 213 ஆக உயர்ந்துள்ளது. கலை, அறிவியல், வணிகம், சட்டம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் முதுகலை அல்லது ஆராய்ச்சி படிப்பை தொடரும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.36 லட்சம்வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
* உயர் கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்விற்கான பயிற்சிகள் : பழங்குடியினர் நலத்துறை மூலம் GTR பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு JEE, NEET, CLUT, NIFT மற்றும் CUET போன்ற உயர்கல்வி தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு மருத்துவ கல்லூரியில் 2 மாணவர்களும், திருச்சி NIT கல்லூரியில் 3 மாணவர்களும், திருச்சி தேசிய சட்டக் கல்லூரியில் ஒரு மாணவரும், சென்னை தரமணி NIFT-ல் 4 மாணவர்களும் திண்டுக்கல் காந்தி கிராம் மத்திய பல்கலைக் கழகத்தில் 6 மாணவர்களும், ஆக 16 மாணவர்கள் சேர்ந்து அரசின் கல்வி உதவித் தொகையுடன் பயின்று வருகின்றனர்.
10ம் வகுப்பு பொது தேர்வில் 2021-22ம் ஆண்டில் ஆதி திராவிடர் பழங்குடியின தேர்ச்சி விகிதம் 78 சதவீதம் என்பது 2023-24ம் ஆண்டில் 92 சதவீதம் என உயர்ந்து சாதனை படைத்தது, அதே போல 12ம் வகுப்பு பொது தேர்வில் பட்டியல் வகுப்பினர் பழங்குடியின தேர்ச்சி 2021-22 ல் 84 சதவீதம் என்பது 2023-24ம் ஆண்டில் 96 சதவீதம் அதிகரித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் பயனாக 60 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவில் பழங்குடி இன சமுதாயத்தை சேர்ந்த ரோகினி, சுகன்யா என்னும் இரண்டு மாணவியர் 2024 ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்று திருச்சி என்.ஐ.டில் சேர்ந்து மாபெரும் சாதனைகள் படைத்தனர்.
* சாதனைகள் படைத்துள்ள மலைவாழ் மக்கள் இன மாணவிகள்: எல்.சுகன்யா, ஆர்.ரோகினி ஆகிய இருவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்கள். இவர்கள் ஜே.இ.இ. தேர்ச்சி பெற்று திருச்சி என்.ஐ.டி. நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்கு நான் முதல்வன் திட்டம்தான் எங்களுக்கு உதவியது என்று கூறி முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சுந்தரராஜபுரம் பட்டியல் வகுப்பினர் நலத்துறை பள்ளி மாணவர் சி. பார்த்தசாரதி சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் வானூர்தி வடிவமைப்புப் பிரிவில் சேர்ந்து, தனது கனவு நிறைவேறியது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
* நுழைவுத் தேர்வுப் பயிற்சி: 59 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ரூ.2.52 கோடி செலவில் உயர்கல்வி தேர்வுகளுக்கான (JEE, NEET, CLAT, NIFT, CUET) பயிற்சி வழங்க வழங்கப்பட்டன. 2025-26ம் ஆண்டில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளைச் சேர்ந்த 111 மாணவர்களும், பட்டியல் வகுப்பினர் நல பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவர்களும் நுழைவுத் தேர்வுகளில் (IIT, NIT மற்றும் தேசிய சட்டக் கல்லூரி உள்பட) தேர்ச்சி பெற்று தலைசிறந்த நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனர்.
* நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்: விவசாய தொழிலாளர்களாக உள்ள பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியின மகளிரை நில உடமையாளர்களாக உயர்த்தி சமூக நிலை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிரையம் செய்யப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் 50 விழுக்காடு அல்லது அதிகப்பட்சம் ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், கிரையம் பெறும் நிலங்களுக்கு முத்திரைத் தாள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்துவதிலிருந்து அரசால் முழுவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளில் மொத்தம் 1042 மகளிர் நிலம் வாங்குவதற்காக மொத்தம் 49.35 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
* தூய்மை பணியாளர்களின் தோழன்: தூய்மைப் பணியாளருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை கடந்த 15ம் தேதி கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார். இதன்படி, 31,373 தூய்மைப் பணியாளருக்கு உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தூய்மைப் பணியாளருக்கு இத்திட்டம் டிசம்பர் திங்கள் 6 தேதி முதல் விரிவுபடுத்தப்படவுள்ளது. பணியில் உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளார்.
* தூய்மைப் பணியாளர்களுக்கு 1000 வீடுகள் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: 90 சதவீத அரசு மானியத்துடன் 1,000 வீடுகள் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.110 கோடி செலவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். மேலும், சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டுகளில், 30,000 வீடுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த சிறப்பான திட்டங்களால் தமிழ்நாட்டில் வாழும் ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் உயர்ந்து முன்னேற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* 2,88,476 வீடற்ற பட்டியல் வகுப்பினர்/பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனை இ-பட்டாக்களின் எண்ணிக்கை


