தமிழகத்தில் திரை பிம்பங்களை கடவுளாக கொண்டாடுகிறார்கள் 41 பேர் பலிக்கு நாம் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும்: சென்னை ஐகோர்ட் நீதிபதி பேச்சு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாவட்ட நீதித்துறை சார்பில், பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் திருவண்ணாமலை சிஇஓ அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி கலந்து கொண்டு பேசியதாவது: ஒழுக்கமான சமுதாயம் உருவானால்தான் நாடு முன்னேறும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் சமீப காலங்களில் அதிகரிக்க திரைத் துறையும் சோசியல் மீடியாவும் தான் காரணம். மற்ற இடங்களில் திரை பிம்பங்களை ரசிப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தான் திரை பிம்பங்களை கடவுளுக்கு நிகராக வைத்துக் கொண்டாடுகிற நிலை உள்ளது. அதற்கு சமீபத்திய உதாரணம் 41 பேர் உயிரிழந்தது. அதற்கு நாம் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும். பச்சை குழந்தையை மிதித்து விட்டு சென்றுள்ளனர். நான் யார் பேரிலும் குறை சொல்ல விரும்பவில்லை. நம் சமுதாயத்தில் உள்ள குறை. லஞ்சத்தை நாம் ஒழிக்க வேண்டும். லஞ்சம் ஒழிய வேண்டும் என்றால் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும். ஒழுக்கமான சமுதாயம் உருவாக வேண்டும். இவர் அவர் பேசினார்.

