சென்னை: தென்னிந்தியப் பகுதி மற்றும் தமிழகப் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும். இதனால் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழையில் மதுரை பகுதியில் 130மிமீ, கிருஷ்ணகிரி 120 மிமீ, அதிகபட்சமாக பெய்துள்ளது.
இதற்கிடையே, அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ‘சக்தி புயல்’- குஜராத் அருகே அரபிக் கடலில் 800 கிமீ தலைவில் மையம் கொண்டிருந்த நிலையில் ஓமன் நோக்கி சென்றுள்ளது. இது அங்கு செயலிழந்து மீண்டும் அரபிக் கடல் பகுதிக்கு திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று மதியமே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மாலையில் டெல்டாவில் மழை பெய்தது. விருதுநகர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியில் கனமழை பெய்துள்ளது. திருநெல்வேலி வடக்குப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது.சிவகங்கை, மதுரை பகுதியின் சுற்றுவட்டாரப் பகுதியிலும், தேவக்கோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, பகுதியில் நேற்று மாலையில் மழை பெய்தது. தென் பகுதியில் பெய்த மழை படிப்படியாக புதுக்கோட்டை பகுதியில் பெய்து கடலோரப்பகுதி, ராமநாதபுரம் பகுதியில் பெய்து கொண்டே திருச்சி, அரியலூர் பெரம்பலூர், பகுதியிலும் கள்ளக்குறிச்சி, சுற்றுவட்டாரப் பகுதியில் திருவண்ணாமலை திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட வட உள் மாவட்டங்களிலும் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மழை பெய்துள்ளது.
வட கடலோரங்களில் அதிகாலையில் மழை பெய்தது. இந்நிலையில், தென்னிந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதேபோல தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் காரணமாக கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.
இதுதவிர, உயர் அழுத்த காற்றின் காரணமாக கடலோரத்தில் மற்றும் உள் மாவட்டங்களிலும் இ ன்று மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்பதால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, 7ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழை பெய்யும். 8ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இது தவிர, குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் இன்று வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.