Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு முழுவதும் பொதுப்பணித்துறையின் சாதனையாக திகழும் எழில்மிகு கட்டிடங்கள்: புதிய வரலாற்றை உருவாக்கி வரும் ஆட்சி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பொதுப்பணித்துறையின் சாதனைகளாக கட்டிடக்கலை மாட்சியை புலப்படுத்தும் எழில்மிகு கட்டிடங்கள் திராவிட மாடல் அரசின் பொற்கால ஆட்சியை படைத்து புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை தமிழ்நாட்டின் வளம் பெருக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் வரலாற்று சிறப்புமிக்க கலைச் சின்னங்களை உருவாக்கும் பெருமைக்குரிய துறையாகும்.

லைஞர் கட்டமைப்புகளாக உருவாக்கிய கலைச் சின்னங்களில் இன்றும் எழிலோடு சென்னை மாநகரின் தனித்தன்மையையும் தமிழ்ச் செம்மொழி மாண்பையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது வள்ளுவர் கோட்டம். 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓர் ஆண்டு காலத்தில் சென்னை கிண்டியில் ரூ.240.53 கோடியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை கட்டி திறந்து வைத்தார். கொளத்தூர் தொகுதியில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மொத்தம் ரூ.210 கோடியே 80 லட்சம் செலவில் 6 அடுக்கு தளங்களில் 560 படுக்கை வசதிகளுடன் 6 அறுவை சிகிச்சை அரங்கம், நவீன ரத்த வங்கி, புற்று நோயியல் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, நரம்பியல் பிரிவு, மகப்பேறு பிரிவு என்று நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அனைத்து வசதிகளோடும் மிகப் பிரம்மாண்டமாக உயர் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மிகவும் பழைமையானது. அந்த மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.187.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அந்நிதி மூலம் கட்டப்பட்ட மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் கூடுதல் கட்டிடத்தை முதல்வர் 27.2.2024 அன்று திறந்து வைத்தார். ரூ.4179 கோடியில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள்: அரியலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாகை, நாமக்கல், உதகை, ராமநாதபுரம், திருப்பூர், விருதுநகர், திருவள்ளூர், ஆகிய 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டிடங்கள் ரூ.4,179 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் காரப்பேட்டையில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் ரூ. 218 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 29.6.2022 அன்று ரூ.109.71 கோடியில் கட்டப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், 30.6.2022 அன்று ரூ.118.40 கோடியில் கட்டப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், 4.3.2024 அன்று ரூ.114.48 கோடியில் கட்டப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், 10.11.2024 அன்று ரூ.70.57 கோடியில் கட்டப்பட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் ஆகிய 4 மாவட்ட அலுவலக கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கீழடி அருங்காட்சியகக் கட்டடம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகை கிராமத்தில் கீழடி அகழாய்வில் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டின் நகர நாகரீக வாழ்வின் சின்னங்களாக கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்களை காட்சிப்படுத்திட தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை பறைசாற்றும் உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளுடன் கூடிய புதிய அகழ்வைப்பக அருங்காட்சியக கட்டிடம் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, முதல்வரால் 5.3.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: மதுரை புதுநத்தம் சாலையில் 2022 பிப்ரவரி மாதம் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 6 தளங்களுடன் 2.13 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஏறத்தாழ 5 லட்சம் நூல்கள் இடம் பெறக்கூடிய வகையில் பிரம்மாண்டமான நூலகம் உலகத்தரத்தில் கட்டி முடிக்கப்பட்டது. அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.62.77 கோடி செலவில் 5 தளங்களுடன் பிரம்மாண்டமான வடிவில் உலகத் தரத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட உலகின் முதல் ஏறுதழுவுதல் அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

ரூ.53.73 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம் புதிய தொழில்நுட்பத்தில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் 26.2.2024 அன்று திறந்து வைத்தார். இதுவரை கலைஞர் நினைவிடத்தை ஏறத்தாழ 63 லட்சம் மக்கள் பார்வையிட்டு பாராட்டியுள்ளார்கள். குமரி முனையில் முக்கடல்களும் கூடும் இடத்தில் கடல் அலைகளின் நடுவே, அய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி, தற்போது 25 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை சிறப்பிக்கும் வகையில் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் வகையில் கடல் நடுவில் நாட்டிலேயே முதலாவதாக ரூ.37 கோடி செலவில் மிகப் பிரமாண்டமான கண்ணாடி இழைப் பாலத்தினை கட்டி, 30.12.2024 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுதவிர, டெல்லி சாணக்கியபுரியில் ரூ.257 கோடியில் வைகை தமிழ்நாடு இல்ல கட்டிடங்கள், கோவையில் கட்டப்படும் ரூ.300 கோடி மதிப்பிலான தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம், திருச்சியில் கட்டப்படும் ரூ.290 கோடி மதிப்பீட்டிலான மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு கிராமத்தில் ரூ.525 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டப்பட்டு வருகின்றன.

இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி, திராவிட மாடல் அரசின் பொற்கால ஆட்சியை படைத்து புதிய வரலாற்றை உருவாக்கி வருகிறார். எதிர்கால வரலாற்றில், ‘ஸ்டாலின் கட்டிடக் கலை’ என போற்றிப் புகழப்படும் பெருமைக்குரிய கட்டிடங்களாக திகழும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

* 5,451 கோடி ரூபாயில் புதிய கட்டிடங்கள்

* ரூ.240.53 கோடியில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை

* ரூ.187.79 கோடியில் மதுரை ராஜாஜி மருத்துவமனை கூடுதல் கட்டிடம்

* ரூ.4,179 கோடியில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடங்கள்

* ரூ.452.76 கோடியில் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள்

* ரூ.218.84 கோடியில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்

* ரூ.62.77 கோடியில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

* ரூ.53.73 கோடியில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்

* ரூ.37 கோடியில் குமரிமுனையில் கண்ணாடி இழைப் பாலம்

* ரூ.18.42 கோடியில் கீழடி அகழ்வைப்பக அருங்காட்சியகம்