Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கல்வியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்: 2,65,318 பேருக்கு கூடுதலாக கல்வி உதவித் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியிலேயே உயர்ந்த தமிழ்நாடாக மாறவேண்டும், மாறும், நிச்சயமாக மாற்றுவோம். மாணவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். உங்களுடைய படிப்புக்கு துணையாக உங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன் என்று சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார். தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் வளர்ச்சியை நோக்கிய நலத்திட்டங்களும் ஏராளமாக செய்யப்படுகிறது.

அதில் முக்கியமானது புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டமாகும். இந்த திட்டங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2.65,318 பேர் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படுவதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று மாலை நடந்தது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பெயரில் இந்த விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த விழா 7 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்தது. முதல் பகுதியாக, முதல்வரின் காலை உணவுத் திட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து, நான் முதல்வன், விளையாட்டுச் சாதனையாளர்கள், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், அரசு பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற சாதனையாளர்கள் பங்குபெற்ற விழா நடந்தது. மேலும் திட்டங்களால் பயன்பெற்றவர்கள், சாதித்தவர்கள், துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கல்வியை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழங்கிவரும் அகரம் பவுண்டேஷனுக்காக நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோரது சார்பில் அவரது தந்தை சிவகுமார், இயக்குநர் ஞானவேல்ராஜா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாணவர்களின் பேச்சைக் கேட்க கேட்க, நான் மிகவும் எமோசனல் ஆகிவிட்டேன். ஏனென்றால், உங்களுடைய கருத்துகளையும் பீட்பேக்கையும் கேட்கும்போது, நாம் உழைக்கின்ற உழைப்புக்கான பலன், நம்முடைய கண் முன்னாலேயே தெரிகிறது என்று இங்கே உணர்ந்திருக்கிறேன், அதற்காக பெருமைப்படுகிறேன். எனக்கு முன்னால் பேசிய எல்லோரும், தமிழ்நாடு எந்தளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது, எப்படியெல்லாம் திட்டங்களைக் கொண்டு வந்து, எத்தனை இடர்கள் வந்தாலும், தன்னுடைய மாணவர்களை முன்னேற்றுகிறது என்று பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு முக்கிய காரணம், எங்களை பாராட்டிக் கொள்வதற்காக அல்ல, இன்றைக்கு நாங்கள் உங்களை கொண்டாடுவதை பார்த்து, அடுத்தடுத்த பேட்ஜ் மாணவர்களுக்கும், இன்னும் படிப்பு மீது ஆர்வம் அதிகமாக வேண்டும், அதுதான் முக்கியம். அதிலும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்த விழாவுக்கு வந்து, நம்மையெல்லாம் பெருமைப்படுத்தி இருக்கிறார் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். தங்கை கனிமொழி மூலமாக, மாணவர்கள் நிகழ்ச்சி என்று சொல்லி அழைத்ததும், உடனே ஓகே சொல்லி, பல பணிகளுக்கு இடையிலே இங்கே வந்திருக்கிறார்.

அரசின் மகளிர் விடியல் பயணம் திட்டம் போலவே, தெலங்கானா மாநிலத்திலும், மகாலட்சுமி திட்டம் என்கிற பெயரில், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அதேபோல, தெலங்கானா மாநிலத்தில் செயல்படுத்துகின்ற நல்ல திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த நாங்களும் தயாராக இருக்கிறோம். இதுதான் ஆரோக்கியமான ‘வளர்ச்சி’ அரசியல். தொடக்கக்கல்வி முடித்துக் கொண்டு, மேல்நிலைக் கல்விக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று சட்டமன்ற உறுப்பினராக நான் முதன்முதலாக அவையில் எடுத்து வைத்த கோரிக்கையை ஏற்று, இலவச பஸ் பாஸ் திட்டத்தை அன்றைய முதலமைச்சர் கலைஞர் அறிமுகப்படுத்தினார்.

அடுத்து, கலைஞர் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரிக் கல்விக்கு செல்வதற்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு பீஸ் இல்லை என்று சொன்னார். அனைத்து சமூகத்தினருக்கும் கல்விச் சாலைகளில் இடம் கிடைக்க, இடஒதுக்கீட்டை உயர்த்தினார். இப்படி, ஏராளமான போராட்டங்கள் நிறைந்தது நம்முடைய கல்விப் பயணம். இந்த பயணத்தை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு போகத்தான், நம்முடைய திராவிட மாடல் அரசு நான்கு ஆண்டுகளாக புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மாடல் ஸ்கூல்ஸ், ஸ்மார்ட் வகுப்பறைகள், விளையாட்டுத் துறைக்கு சிறப்பு கவனம் செலுத்தும் திட்டங்கள் என்று ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.

ஒருவேளை உணவு தருவதாலோ, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாலோ, \”என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?\” என்று சிலர் நினைக்கலாம். காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்ததில் இருந்து, மாணவர்களுடைய வருகை அதிகரித்திருக்கிறது. புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்து, பிளஸ் 2 முடித்த மாணவர்களில் 75 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்வியில் சேருகிறார்கள். குறிப்பாக, பெண்கள் உயர்கல்வியில் சேருவது அதிக அளவில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அரசுப் பள்ளியில் படித்த ஆயிரத்து 878 மாணவர்கள் கடந்த 4 ஆண்டுகளில், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச் சென்றிருக்கிறார்கள்.

இன்றைக்கு கல்வியில், தமிழ்நாடு பெற்றிருக்கின்ற எழுச்சி, இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது, நம்முடைய திட்டங்களை அவர்கள் மாநிலங்களில் செயல்படுத்த ஸ்டடி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் கல்விக்கு தடை ஏற்படுத்தலாம் என்று ஒன்றியத்தில் நினைக்கிறார்கள். நம்முடைய வளர்ச்சியைப் பார்த்து, ஒதுக்க முடியாமல், தடை ஏற்படுத்துகின்ற சிலருக்கு பயத்தை வர வைக்க வேண்டும். நிச்சயம் நம்முடைய திட்டங்களாலும், உங்களுடைய அச்சீவ்மென்டாலும் அது நடைபெறும். என்னுடைய இலக்கு அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி, கல்வி நிலையங்களுக்குள்ளே எந்த காரணத்தாலும், எவர் ஒருவரும் வராமல் இருக்கக் கூடாது, தடுக்கப்படக் கூடாது.

மாணவர்களான உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நம்முடைய அரசு உருவாக்கித் தரக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொண்டு உயர, உயர பறக்கவேண்டும். அதைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். அப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தான் இங்கே பேசிய பலர் கொடுத்திருக்கிறீர்கள். இனியும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் யுஜி முடித்துவிட்டு வேலைக்குச் சென்றாலும், நல்ல வேலையில் டாப் பொசிசனில் சென்று இருந்தாலும், பிஜியையும் படிக்க வேண்டும்.

ஆராய்ச்சிப் படிப்புக்கும் செல்ல வேண்டும். உலகம் மிகவும் பெரியது. உங்களுடைய வெற்றி அனைத்து திசைகளிலும் எதிரொலிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து படியுங்கள். உங்களுடைய படிப்புக்கு துணையாக உங்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியிலேயே உயர்ந்த தமிழ்நாடாக மாறவேண்டும், மாறும், நிச்சயமாக மாற்றுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

* மாணவிக்கு பேனா பரிசு

என்னுடைய பெயர் சுப்புலட்சுமி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் படிக்கிறேன். நான் பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டும் என்று அப்பா, அம்மாவிடம் சென்று கேட்டேன். பொட்டப்பிள்ளையெல்லாம் எதற்கு படிக்க வேண்டும். படிக்கெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டனர். எப்படியாவது படிக்க வேண்டும் என்று கூறி மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தேன். விண்ணப்பம் போடுவதற்கு கடைசிநாள் வரை பணம் இல்லை. அதனால் வேலைக்கு சென்று அந்த பணத்தை வைத்து விண்ணப்பித்தேன். என்னுடைய அப்பா ஆடு மேய்க்கும் விவசாயி தான். என்னுடைய அம்மா கூலி வேலை செய்பவர்கள் தான். படிக்க வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை.

மேலும் கல்லூரியில் எனக்கு படிப்பதற்கு இடம் கிடைத்தது, ஆனாலும் கல்லூரியில் சேர்த்து விடுவதற்கு யாரும் வரவில்லை.

அதன்பிறகு அடம் பிடித்ததால் கல்லூயில் சேர்த்து விட்டனர். அப்போது கல்லூரியில் சேருவதற்கு பணம் இல்லாத நிலையில் அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தனர். பின்னர் எனக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் எனக்கு வந்த பணத்தை அந்த ஆசிரியரிடம் கொடுத்தேன் வாங்க மறுத்துவிட்டார். ஆனாலும் வற்புறுத்தி அவரிடம் கொடுத்தேன். மேலும் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் வரும் பணத்தின் மூலம் நோட், தேர்வு கட்டணத்தை நானே செலுத்துக் கொள்கிறேன். அதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் கணிதவியல் துறை எடுத்து படிக்கிறேன், ஆசிரியராக வேண்டும் என்பது தான் என்னுடைய மிகப்பெரிய ஆசையே. மேலும் மாணவி கணித ஆசிரியராக விரும்புவதாக கூறியதையடுத்து முதல்வர் அவரை அழைத்து பேனா வழங்கி வாழ்த்தினார்.

* திறமையால் வாழ்க்கையை மாற்றிவிடலாம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் அடிக்கடி சொல்வது ஒன்றே ஒன்று தான் கல்வி ஒன்று தான் அழிக்க முடியாத சொத்து என்று. கல்வி மாணவர்களுக்கான சொத்து என்றால் இங்கு அமர்ந்திருக்க கூடிய மாணவர்கள் தான் சொத்து. திமுக அரசு பள்ளி கல்வி மற்றும் உயர்க் கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை மாணவர்களுக்கான ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருந்து வருகிறது. திறமை இருந்தால் போதும் திறமையால் வாழ்க்கையை மாற்றி காட்ட திமுக அரசு எப்போதும் இருக்கும். அதற்கு மனோஜ் சிறந்த உதாரணமாக இருக்கிறார். காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது. திட்டங்களை யாராவது ஒரு நாள் மாற்றிவிடலாம் என்று நினைத்தால் அவர்கள் மனதில் நிச்சயம் பயம் வரும். அந்த பயம் இருக்கும் வரை தமிழ்நாட்டை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் ஆள்கிறார் என்று பொருள். இவ்வாறு அவர் கூறினார்.

* ஜப்பான் மொழியில் முதல்வருக்கு மாணவி நன்றி

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜாலிஷா பேசியதாவது: நான் காரைக்குடியில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறேன். ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஜப்பான் நாட்டில் உள்ள நெக்ஸ்ட்டைம் கார்ப்பரேஷன் கம்பெனியில் 10 நாள் இன்டன்ஷிப்புக்கான 10 பேர் சென்றோம். கடைசி நாளில் எங்களுக்கு ஒரு இன்டர்வியூ நடந்தது. அதில் ஜப்பான் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. 20 லட்சம் சம்பளம் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது ஜப்பான் மொழியை கடந்த பிப்ரவரியில் இருந்து கற்று வருகிறேன். வழக்கமாக மாணவர்கள் தான் வெளிநாட்டிற்கு சென்று வேலைக்கு செல்வதை கேள்விப்பட்டுள்ளேன். தற்போது நான் முதல்வன் மூலம் பெண்களும் வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஜப்பான் மொழியில் நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவரின் ஜப்பான் மொழியில் பேசிய உரைக்கு விழா அரங்கத்தில் இருந்த அனைவரும் கைத்தட்டி பாராட்டினர்.

* சினிமா கைவிட்டாலும் 2 டிகிரி இருக்கிறது: நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது: சினிமா விழாவில் ஏதாவது பேசிவிட்டு போகலாம். இங்கு அப்படி பேச முடியாது. என்னை கூப்பிட்ட துணை முதல்வருக்கு நன்றி. நான் இந்த நிகழ்ச்சியை, திட்டங்களை வாழ்த்துவதற்குதான் வந்தேன். ஆனால் மேடையில் பேசிய ஒவ்வொருவரின் பேச்சு, அவர்களின் இன்பரேஷன் மிகவும் பெரிதாக இருக்கிறது. அரசு இவ்வளவு திட்டங்களை செய்வது நல்ல விஷயங்களை செய்வதும், அதில் பயனடைந்து மேலே வந்திருக்க வேண்டும் என்பது பெரிய விஷயம். உலகில் உள்ள பெரிய செல்வத்தை விட கல்வித்தான் மிகப்பெரிய செல்வம். இங்கு பேசியவர்கள் நாங்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டோம், பள்ளிக்கு செல்ல வசதி இல்லை, நடந்து போனோம் என்றனர். ஆனால் நான் 3 வேலை சாப்பிட்டேன். ஆனால், எனது அப்பா ஒரு வேலை தான் சாப்பிட்டு கஷ்டப்பட்டு எங்களை படிக்க வைத்தார். அப்போது அவர் நடந்தே பள்ளிக்கு சென்றார். நான் படித்ததற்கு, இப்போது உள்ள துறைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், இங்கு வந்து மேடையில் பேசிய மாணவ - மாணவர்களை பார்த்து எனக்கு ஒரு நம்பிக்கை, ஒரு தைரியம் பிறந்துள்ளது. சினிமா துறை கைவிட்டாலும், என்னிடம் இரண்டு டிகிரி இருக்கிறது. இங்கிருந்து அனுப்பினாலும் வேலை செய்து பிழைக்க முடியும் என்று தைரியம் வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

* புதுமைப்பெண் திட்டத்தால் தாயும், மகனும் ஒரே கல்லூரி

‘புதுமைப்பெண்’ திட்டத்தில் பயன்பெற்ற திருமணமான சத்யா என்ற பெண் பேசும்போது,‘வீட்டில் மாடு வளர்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நானும் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் 10வது படித்து 17 வருடம் ஆகிவிட்டது. எனது மகனும் பாலிடெக்னிக் படித்து வருகிறான். நானும் பாலிடெக்னிக்கல் படிக்க ஆரம்பித்தேன். 17 வருடத்துக்கு பிறகு எப்படி படிப்பாய் என்று எல்லாரும் கேட்டார்கள். அப்போதுதான் மகளிர் உதவித்தொகை ரூ.1000 கிடைத்தது. பின்னர் புதுமைப்பெண் திட்டம் மூலம் ரூ.1000 கிடைத்தது. நானும், எனது பையனும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் படிக்கிறோம்,’ என்றார். இதுகுறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசும்போது, \\”உங்கள் கல்லூரியில் சொன்னார்கள். பையனைவிட அம்மா தான் நன்றாக படிக்கிறார்கள்\\” என்று கூறியுள்ளதாக கேள்விப்பட்டேன் என்றேன். புதுமைப்பெண் திட்டத்தால் பயன்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ரம்யா பேசும்போது, நான் திருச்சியில் உள்ள கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வருகிறேன். எனது அம்மாவுக்கு காது கேட்காது. நான் அரசு தரும் ரூ.1000 திட்டத்தில் மாதம் ரூ.100 சேர்த்து வைத்து தற்போது அம்மாவுக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்க கொடுத்துள்ளேன்” என்றார்.