சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித் குமார், கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக அஜித் குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஐரோப்பா, துபாய் போன்ற நாடுகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசு வென்றுள்ள அவர், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடந்த 24ஹெச் கார் பந்தயத்தில் பங்கேற்று 3வது இடத்தை பிடித்தார்.
வரும் டிசம்பர் மாதம் மலேசியாவில் தொடங்கும் ஆசிய லீ மான்ஸ் கார் ரேஸ் தொடரில் அஜித் குமாரின் ரேஸிங் அணி பங்கேற்கிறது. இந்திய திரையுலகை பிரபலப்படுத்தும் வகையில், அதன் லோகோவை தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் அஜித் குமார் பொறித்துள்ளார். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘நண்பரும், நடிகருமான அஜித் குமாரின் அணி, 24ஹெச் ஐரோப்பிய என்டியூரன்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஒட்டுமொத்தமாக 3வது இடத்தை பிடித்ததை அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும், தமிழ்நாட்டையும் பெருமையடைய செய்துள்ள அஜித் குமாருக்கும், அவரது குழுவினருக்கும் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த சர்வதேச போட்டியின்போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) லோகோவை கார் மற்றும் ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். அஜித் குமார் அணி ரேஸிங் டிராக்கில் இன்னும் பல வெற்றிகளை குவிக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.