Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை விலகுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாத இறுதிவரையில் பெய்து முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக அக்டோபர் மாதம் வரையில் நீடித்தது.

அக்டோபர் 16ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழை விலகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நேற்றும் பெய்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து இரண்டு நாட்களில் விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வட கிழக்கு பருவமழை தமிழகம் புதுச்சேரி, கேரளா, மாகே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்குகடலோர ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் நாளை தொடங்க உள்ளது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக் கடல்-பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு- வட மேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக 19ம் தேதியில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரள-கர்நாடகப் பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ரமாநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 16ம் தேதி ஓரிரு இடங்களிலும், கனமழை பெய்யும் என்பதால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநிலை 20ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.