தமிழக எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருப்பவர் முகத்தை மறைத்துக்கொண்டு அமித்ஷா இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன்? திமுக ஐடி விங்க் கேள்வி
சென்னை: தமிழக எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருப்பவர், முகத்தை மறைத்துக் கொண்டு அமித்ஷா இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன் என்று திமுக ஐடி விங்க் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக ஐடி விங்க் நேற்று எடப்பாடி பழனிசாமியின் கள்ளக் கார் பயணங்களும், கேள்விகளும்? என்ற தலைப்பில் ஒரு பதிவை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வெள்ளை அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் போது எப்படி ரூ.8 கோடி மதிப்புள்ள DL2CAN 9009 பதிவெண் கொண்ட கருப்பு பென்ட்லி தனியார் சொகுசு காரில் வந்தார். டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மர்மம் என்ன? கட்சி தொடர்பான சந்திப்பு என்றால் கட்சியினர் உடனிருக்க வேண்டும், அரசு அலுவல் என்றால் அதிகாரிகள் உடனிருக்க வேண்டும், தனிப்பட்ட குடும்ப நிகழ்வென்றால் குடும்பத்தினர் இருக்கலாம்.
ஆனால் அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்த காரில் பழனிசாமி உடன் இருந்தது யார்?. பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்? அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க தமிழ்நாடு எதிர்க் கட்சி தலைவர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தனது முகத்தை மறைத்துக் கொண்டு அமித்ஷா இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன், என்ன அவசியம், என்ன நிர்ப்பந்தம், எதை மறைக்கிறார், யாரை மறைக்கிறார், செய்தியாளர் சந்திப்பில் தடுமாறும் எடப்பாடி பழனிசாமியிடம் இந்த கேள்விகளுக்கு பதிலுண்டா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.