சென்னை: ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் இந்திய காற்று விசையாழி உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் விண்டர்ஜி இந்தியா-2025, 7வது சர்வதேச 3 நாள் வர்த்தக கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கண்காட்சியை ஒன்றிய எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று பார்வையிட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை செயலாளர் ராஜேஷ் குல்ஹாரி, விசையாழி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கிரிஷ் தந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், ‘‘25 ஆயிரம் மெகாவாட் திறனுடன் தேசிய அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 4வது இடத்தில் உள்ளோம். 1990களில் எரிசக்தி வங்கியை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழகம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிகளை தமிழகம் செய்துள்ளது” என்றார். தொடர்ந்து ஒன்றிய எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசுகையில், “இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தி திறன் 257 மெகாவாட், அதில் காற்றாலை 5ல் ஒரு பங்கு வகிக்கிறது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல காற்றாலை ஆற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. 2030ம் ஆண்டுக்குள் உலகளாவிய காற்றாலை விநியோக வங்கியில் இந்தியா 10 சதவீத பங்கை பெறும் திறன் கொண்டுள்ளது” என்றார்.
நிகழ்ச்சிக்கு பின் ஒன்றிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, செயலாளர் ராஜேஷ் குல்ஹாரி நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் காற்றாலை மின்சார மொத்த நிறுவத்திறன் தற்போது 54 ஜிகா வாட், மேலும் 30 ஜிகாவாட்டுக்கான திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2030ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 500 ஜிகாவாட் ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி மறுசீரமைப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு புதுப்பொலிவு கொடுத்துள்ளது. செலவுகளை குறைத்துள்ளது, அதாவது ஒரு மெகாவாட்டுக்கு 25 லட்சம் வரை சேமிப்பு கிடைத்துள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளோம், இவை நாட்டின் மொத்த எற்றுமதியை ஊக்குவிக்கும்.
தமிழகம் மற்றும் குஜராத்தில் தலா 500 ஜிகாவாட் திறனில் கடல் காற்றாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு குஜராத்தில் டெண்டர் கோரப்பட்டது, நிறுவனங்கள் பங்கேற்காததால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டு முழுவதும் தரவுகள் சேமிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவுகள் மிகவும் ஊக்கமளிக்கும் விதமாக உள்ளன, திறன் பயன்பாடு காரணி 45 முதல் 50 சதவீதம் வரை உள்ளது.
தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர் கோரப்படும்.
மே, ஜூன் மாதங்களில் பணிகள் தொடங்கப்படும். உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் கட்டமைப்புகளில் சரியாக சேர்க்க மின் வழித்தடங்களை வலிமைப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மாநிலங்களே அதை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த நிகழ்ச்சியில் எரிசக்தி துறையில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கான விருதுகள்கள் வழங்கப்பட்டது. தமிழகத்திற்கான விருதினை தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
 
  
  
  
   
