Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டை குறிவைக்கும் தேசிய பெண் தலைவரின் ரகசிய திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘முத்திரை குத்தி விடக்கூடாது என பயந்தே அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் மாஜி அமைச்சர் ஒருத்தர் குக்கர் தலைமையானவரை கடுமையாக விமர்சித்தாராமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் இருந்து தேனிக்காரர், குக்கர் தலைமையானவர் பிரிந்து சென்ற நேரத்தில் இவர்களை பற்றி மாஜி அமைச்சர்கள் விமர்சனம் செய்து வந்தாங்க.. இதில் எந்தவித விமர்சனமும் செய்யாமல் கடலோர மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ மட்டும் சைலண்ட் மோடில் இருந்து வந்தார்..

தற்போது, தேனிக்காரர் குறித்து அவ்வப்போது பேசி வந்தாலும், குக்கர் தலைமையானவரை மட்டும் விமர்சனம் செய்யாமல் மாஜி அமைச்சர் அமைதியாக இருந்து வந்தார்.. குக்கர் தலைமையானவர் குறித்து மாஜி அமைச்சர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நேரத்தில் நாம் விமர்சனம் செய்யாமல் இருந்தால் அவருடைய ஆதரவாளர் என முத்திரை குத்தி விடுவார்கள் என்பதால் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அவரை பற்றியும் மணியானவர் கடும் விமர்சனம் செய்துவிட்டாராம்.. இதில் கட்சியை விட்டு வெளியேறிய குக்கர் தலைமையானர் ஒரு தறுதலை.

அவர் சேலத்துக்காரர் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என கடுமையாக சாடியுள்ளார்.. கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கே இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாம்.. இந்த டாப்பிக் தான் கடலோர மாவட்ட தொண்டர்களுக்குள்ளே அரசல் புரசலா ஓடிட்டு இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோபிக்காரரை அடிக்கடி அழைத்து பேசும் மலராத கட்சியின் தேசிய பெண் தலைவர் போடும் ரகசிய திட்டம் என்னவாம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவர் டெல்லிக்கு சென்று உள்துறையானவரை பார்த்துட்டு வெளியே வரும்போது முகத்தை மூடிக்கிட்டு வந்த தகவல் கட்சிக்காரர்களுக்கு ரொம்பவே சங்கடத்தை ஏற்படுத்தி இருக்குதாம்.. உள்துறையானவரை பார்க்க ரெண்டாங்கட்ட தலைவர்களை கூட்டிக்கிட்டு போனாராம் இலைக்கட்சி தலைவர்.. பின்னர் அவர்களை வெளியே அமர வைத்து விட்டு, அவர் மட்டும் அரைமணி நேரத்திற்கும் மேலாக தனியாக சந்தித்து பேசினாராம்.. இது என்ன தனி சந்திப்புன்னு அவருடன் சென்ற நிர்வாகிகள் கேள்வி எழுப்பிக்கிட்டு இருக்காங்களாம்...

ஒன்றாக பார்த்தோம், கட்சி தொடர்பாக பேசினோம்.. அதோடு எல்லாம் முடிந்து விட்டது.. இதையும் தாண்டி தனியாக சந்திக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்வியை அவர்களுக்குள்ளேயே கேட்கிறாங்களாம்.. அப்படியானால் எங்களுக்கு தெரியாமல் என்ன பேசினார், இதுபோன்ற நடவடிக்கை தலைமை பண்புக்கு உகந்தது அல்ல எனவும் வினவுறாங்களாம்.. அதே நேரத்தில் கோபிக்காரர் ஒன்றிய நிதி மந்திரியை அடிக்கடி சந்தித்து பேசுவதிலும் ஒரு தந்திரம் புதைந்து கிடக்குதாம்...

இதுவரை மக்களை சந்தித்து ஓட்டு வாங்கி அதன்மூலம் அவர் நிதி மந்திரி ஆனதே இல்லையாம்.. எல்லாமே நியமனத்தில் தான் நடக்குதாம்.. 2029ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பி.எம். பதவிக்கு தற்போதைய உள்துறையானவரு குறி வச்சியிருக்காராம்.. தமிழ்நாட்டில் இருந்து பல எம்பிக்களை பெற்றுவிடலாம் என திட்டம் வச்சதன் காரணமாகத்தான் ரொம்பவே மென்மையாக போறாராம்.. இல்லை என்றால் பல மாநிலங்களில் கட்சியை உடைத்து அதன்மூலம் ஆதாயம் பெற்றதுபோல இலைக்கட்சியையும் உடைத்து விடுவாராம்..

அவருக்கு பி.எம். பதவி மீது ஆசை இருப்பதினால்தான் இலைக்கட்சி மீது கை வைக்காமல் இருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. ஆனால் நிதிமந்திரிக்கோ தமிழ்நாட்டின் சி.எம். ஆகிடலாம் என்ற ஆசை மனதில் பதிந்திருக்காம்.. இதன் காரணமாகத்தான் கோபிக்காரரை அடிக்கடி அழைச்சி பேசிக்கிட்டிருப்பதாக தகவல் கசிஞ்சியிருக்கு.. இலைக்கட்சி ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்றாலும், அது நடந்தது என்றால் இலைக்கட்சி தலைவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து செய்ய வேண்டியதை செய்திடலாம் என்ற திட்டமும் இருப்பதாகவும் சொல்லப்படுது..

இதையெல்லாம் தெரிந்து கொண்ட இலைக்கட்சி தலைவர் சைலண்டாகவே இருப்பதாக அவரது நெருங்கிய அடிப்பொடிகள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தந்தை, மகன் மோதலால் மாங்கனி எம்எல்ஏவுக்கு மகா அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தந்தை, மகன் மோதலால் கட்சியில் உச்சகட்ட பனிப்போர் நடந்துக்கிட்டு இருக்கு.. சமீபத்தில் நடந்த இடஒதுக்கீடு தியாகிகளுக்கான அஞ்சலி நிகழ்ச்சி இரு அணிகளாக நடந்ததாம்.. இதில் மகனைவிட ஒருபடி மேலாக தந்தை மாஸ் காட்டினாராம்..

இதன் தொடர்ச்சியாக ஆணையத்துக்கும், வழக்கு மன்றத்துக்கும் கட்சி விவகாரம் சென்றிருப்பதால் அதிரடி முடிவுகளை தந்தை தரப்பு எடுக்க முடிவு செய்திருக்கிறதாம்.. தற்போதைக்கு தலைவர் பதவியையும் பறித்து தன்வசம் வைத்துள்ள நிறுவனரோ இரண்டு உயர் பதவியையும் ஒரே நபரிடம் இருந்தால் கட்சியின் சட்ட விதிகளில் சிக்கல், சறுக்கல் ஏற்படலாம் என்பதால் உஷாராகி இருக்கிறாராம்.. அதாவது அந்த பதவியை வேறொருவருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளாராம்..

மகன் இடத்தை பூர்த்தி செய்யும் மகளுக்கா அல்லது மாங்கனி மாவட்ட எம்எல்ஏவுக்கா என்ற பேச்சு கட்சி வட்டாரத்தில் பரவலாக அடிபடுகிறதாம்.. முதலில் பெல் பெயர் அடிபட்டதாம்.. தனக்கோ உடல்நிலை சரியில்லை என நழுவி விட, கடைசியாக இரண்டு பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாம்.. இதன் தாக்கத்தை மாங்கனி மாவட்ட எம்எல்ஏ தரப்புகள் வெளிப்படுத்தி உள்ளார்களாம்..

அதாவது தலைவர் என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகிறார்களாம்.. மாவட்டந்தோறும் பொதுக்குழுவை முடித்தவுடன் எம்எல்ஏவுக்கான மகா அதிர்ஷ்டம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலால் மகன் தரப்பு கொந்தளிப்பில் இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இடம்மாறுதலாகி வந்தாலும்கூட மாநகராட்சி பெண் அதிகாரியின் வசூல் வேட்டையை மட்டும் கட்டுப்படுத்த முடியலையாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட ரேஸ்ேகார்ஸ் பகுதியில் `ஜெய’மான பெயர் கொண்ட ஒரு பெண் சுகாதார ஆய்வாளர் பணிபுரிகிறார். இவர், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்வதில், கரன்சி வாங்காமல் சான்றிதழ் விநியோகம் செய்வது இல்லையாம்.. மாநகரில் குப்பை அகற்றும் ஒப்பந்த நிறுவனங்களையும் விடுவதில்லையாம்..  சுகாதார ஊழியர்கள் யாரேனும் பணிக்கு வராவிட்டால், அவர்கள் பணிக்கு வந்த மாதிரி கணக்கு காட்டி, அவர்களிடம் இருந்தும் காசு பார்த்து விடுகிறாராம்..

இந்த வகையில் மட்டும் மாதம் லகரம் வரை கிடைக்கிறதாம்.. ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பெரிய வணிக வளாகங்கள், பெரும் முதலாளிகளின் குடியிருப்புகள், அபார்ட்மெண்ட்ஸ் ஆகியவற்றில் குப்பை எடுப்பதிலும் கரன்சி கறக்கிறாராம்.. இவர், ஏற்கனவே, பொள்ளாச்சி நகராட்சியில் பணிபுரிந்து வந்தபோது, அங்கு பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் கோவை மாநகராட்சிக்கு இடமாறுதலாகி வந்துள்ளார்.

இங்கும், கரன்சி குவிப்பதில் கொடி கட்டி பறக்கிறாராம்.. எந்தெந்த வகையில் சுருட்ட முடியுமோ, அந்த வகையில் எல்லாம் சுருட்டி வருகிறாராம்.. இங்கு பணிக்கு வந்து ஒரே ஆண்டில் பல லட்சங்களை குவித்துவிட்டாராம்.. இவரது வசூல் வேட்டை தொடர்கிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.