Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 107 டன் கஞ்சா, 3.59 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்: தனியார் பல்கலைக்கழக மாணவர்களிடம் 5,250 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிககையால் 107 டன் கஞ்சா, 3.59 லட்சம் போதை மாத்திரைகள் மற்றும் 2,412 மெத்தப்பெட்டமைன், கொக்கைன் போன்ற பிற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக துடிப்பான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக “பூஜ்ஜிய கஞ்சா சாகுபடி“ என்ற இலக்கினை மேற்கொண்டு வருவதால், இங்கு புகழக்கத்தில் உள்ள போதைப்பொருட்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களிலிருந்தும், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் கடத்தி வரப்படுகின்றன. மேலும், தமிழக முதல்வர் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு காவல்துறை ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் அதிரடி சோதனை மற்றும் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மாநிலம் முழுவதும் கடந்த 2021 ஜீன் முதல் 2025 ஜூலை வரையில், தமிழ்நாடு காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கையால் ஆந்திரா, ஒடிசா மற்றும் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 107 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்ய வைத்திருந்த 3 லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட மெத்தப்பெட்டமைன், கொக்கைன், கஞ்சா ஆயில் என 2412 கிலோ பிற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளது.

இதுதவிர கடந்த ஜூலை மாதம் தாம்பரம் அடுத்த பிரபல தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 5,250 எண்ணிக்கையிலான கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு ெசய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், போதை பொருட்கள் அதிகளவில் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துவதால் அவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கஞ்சா மற்றும் ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் தொடர்ந்து போதை மாத்திரைகள் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 2023 மற்றும் 2025 ஜூன் மாத்திற்கு இடையில், மருந்து அடிப்படையிலான போதைப்பொருள் பறிமுதல் 39,910- என்ற எண்ணிக்கையிலிருந்து 1.42 லட்சத்திற்கும் அதிகமான மாத்திரைகளாக உயர்ந்துள்ளது. போதை மாத்திரைகள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களே அதிக எண்ணிகையில் பயன்படுத்தி வருவது சோதனை முடிவியல் தெரியவந்துள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள கடைகள் மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடநத் 5 ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 61 டன் அளவிலான கஞ்சா, உள்ளிட்ட போதை பொருட்கள் காவல்துறை சார்பில் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறையினரை ஊக்குவிப்பதற்கும் வெகுமதி அளிப்பதற்கும், ``போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்த பணிக்காகத் தமிழ்நாடு முதலமைச்சரின் போலீஸ் பதக்கம்” என்ற சிறப்பு விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு அறிவித்தார். இதனால் போலீசார் அந்த விருதினை பெறும் நோக்கில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கஞ்சா, மெத்தப்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் சொத்துக்களை முடக்கி தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 முதல் 2025 ஜீன் வரையில், போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான வழக்குகளில் நேரடியாகத் தொடர்புள்ள நபர்களின் ரூ.21 கோடி மதிப்புள்ள 45 சொத்துக்கள் மற்றும் 10,741 வங்கிக் கணக்குகளைச் சட்ட அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

மியான்மாரில் இருந்து ஒடிசா, வங்கதேசம் வழியாக இந்தியாவிற்குள் உயர் ரக போதை பொருட்களை சர்வதேச கடத்தல் கும்பல் சென்னை மற்றும் ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கடத்தி வருகின்றனர். இதுபோன்ற கடத்தல்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை ஒன்றிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் முகமை(என்சிபி), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), சுங்கத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படை,

தமிழக கடலோர காவல் படை போன்ற தேசிய மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து போதை பொருட்களை கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பாக, தேசிய போதைப் பொருள் தடுப்பு முகமை(என்சிபி) மூலம் இலங்கை போதைப்பொருள் தடுப்புக் காவல்துறையுடனும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் வழியாக இலங்கைக்கு போதை பொருள் கடத்தும் முயற்சியை தமிழ்நாடு காவல்துறை தடுத்து வருகிறது.

* பொதுமக்கள் புகார் அளிக்க

தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அருகே போதை பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை உதவி எண்கள் (10581), வாட்ஸ்அப் (9498410581) மற்றும் மின்னஞ்சல் முகவரி (spnibcid@gmail.com) அறிவித்துள்ளது. புகார் அளிக்கும் நபர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் போதை பொருள் விற்பனையை தடுக்க தயக்கமின்றி புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.